search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தது

    தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பி.எஸ்.தினேஷ், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, இடஒதுக்கீடு முறைக்கு எதிராக அரியானா, சத்தீஷ்கார் மாநிலங்களைச் சேர்ந்த சுஷீல் பஜாஜ், பிரஜேஷ் சத்பதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுடன் சேர்த்து விசாரித்து வருகிறது.

    சுஷீல் பஜாஜ் மனுவை கடந்த மாதம் 29-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் சாசன அமர்வு முன் நடைபெறும் வழக்குடன் அதை இணைக்க மறுத்துவிட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி தினேஷ் தாக்கல் செய்துள்ள மனுவை பிற மாநிலங்களின் வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கக்கூடாது என தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.

    அப்போது இடையீட்டு மனுதாரர் பார்த்தசாரதி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தை விசாரித்துவரும் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவேண்டும். ஏனெனில், அரசியல் சாசன அமர்வு விசாரித்துவரும் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டால் இந்த வழக்கு விசாரணையைப் பாதிக்கும் என வாதிட்டார்.

    அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்தே, தமிழக அரசின் தலைமை வக்கீல் விஜய்நாராயணன், கூடுதல் தலைமை வக்கீல் ஜெயந்த் முத்துராஜ் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்ததுடன், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு பிரத்தியேகமானது, இதுதொடர்பான மனுவை பிற மாநிலங்களின் வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கக்கூடாது என தெரிவித்தனர்.

    வக்கீல்களின் வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி தினேஷ் தாக்கல் செய்துள்ள மனு, ஏற்கனவே நிலுவையில் உள்ள காயத்ரி வழக்குடன் இணைத்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
    Next Story
    ×