search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபை கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியபோது எடுத்தபடம்.
    X
    கர்நாடக சட்டசபை கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியபோது எடுத்தபடம்.

    கொரோனா ஊரடங்கால் அரசின் வரி வருவாய் குறைந்தது: எடியூரப்பா

    கொரோனா ஊரடங்கால் மாநில அரசின் வரி வருவாய் குறைந்துள்ளதாக சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்து பேசியதாவது:-

    கொரோனா பரவல் காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் நான் கைகட்டி அமைதியாக உட்கார்ந்திருக்கவில்லை. மாநில அரசின் நிதி ஆதாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு உதவி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

    சவால்களை வாய்ப்புகளாக ஏற்று, மருத்துவ துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. பரிசோதனை கூடங்கள் அமைத்தல், செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்தது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டோம். கொரோனா தடுப்பூசியை போடுவதிலும் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு வரி வருவாய் குறைந்தது. தற்போது நிலைமை சரியாகி வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. 2020-21-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 920 கோடி வரி வருவாயாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 758 கோடி ஆகும்.

    கொரோனா நெருக்கடி காரணமாக மத்திய அரசின் வரி வருவாயும் குறைந்துள்ளது. அதனால் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் வரி பங்கும் குறையும். 2020-21-ம் ஆண்டில் பட்ஜெட் அளவு ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 893 கோடி ஆகும். இதில் ஊழியர்கள் சம்பளம் உள்பட அரசின் செலவுகள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 240 கோடி ஆகும். மீதமுள்ள ரூ.87 ஆயிரத்து 653 கோடி திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.

    கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் கர்நாடகத்திற்கு தொழில் முதலீடுகள் ரூ.1.59 லட்சம் கோடி வந்துள்ளது. இது நாட்டிலேயே முதல் இடம் ஆகும். விமான கண்காட்சி மூலம் விமானத்துறை தொடர்பான தொழில்களை தொடங்க நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் கர்நாடகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நெருக்கடியின்போது, உயிர் காத்தல் மற்றும் வாழ்வாதாரம் காத்தல் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பால் உற்பத்தியில் கர்நாடகம் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. தினமும் 80 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகத்தின் மொத்த வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது. நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகத்தின் பங்கு 40 சதவீதம் ஆகும். 80 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    1.36 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ரூ.248 கோடி ஒதுக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5,372 கோடி உதவி வழங்கப்பட்டது. 16.45 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.824 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
    Next Story
    ×