search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கிய நிலம் எங்களுக்கு சொந்தமானது - அலகாபாத் ஐகோர்ட்டில் 2 சகோதரிகள் மனு

    அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, அலகாபாத் ஐகோர்ட்டில் 2 சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    லக்னோ:

    அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. அதே சமயத்தில், அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்ட உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தருமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

    அதன்படி, தன்னிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கிக் கொடுத்தது. அங்கு மசூதி கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்தநிலையில், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று டெல்லியை சேர்ந்த ராணி கபூர், ராமராணி பஞ்சாபி என்ற 2 சகோதரிகள் உரிமை கோரியுள்ளனர். அவர்கள் இதுதொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    என் தந்தை கியான் சந்திர பஞ்சாபி, இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். தற்போதைய அயோத்தி மாவட்டத்தில் உள்ள பைசாபாத்தில் குடியேறினார்.

    அவருக்கு தன்னிபூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலத்தை 5 ஆண்டு காலத்துக்கு அரசு துறை ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலும் அவர் அதை வைத்திருந்தார். அதன்பின், வருவாய்த்துறை ஆவணங்களில் என் தந்தை பெயர் சேர்க்கப்பட்டது. பின்னாளில், ஆவணங்களில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. அதை எதிர்த்து, அயோத்தி கூடுதல் ஆணையரிடம் என் தந்தை மேல்முறையீடு செய்தார். அதன்பிறகு அவரது பெயர் சேர்க்கப்பட்டது. பிறகு நடந்த ஆய்வுப்பணியின்போது, என் தந்தை பெயர் மீண்டும் நீக்கப்பட்டது. அதற்கு எதிராக அயோத்தியில் உள்ள தீர்வுகள் பிரிவு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்தோம்.

    ஆனால், அந்த மனுவை பரிசீலிக்காமல், எங்கள் 28 ஏக்கர் நிலத்தில் இருந்து 5 ஏக்கரை மசூதி கட்ட ஒதுக்கி உள்ளனர். தீர்வுகள் பிரிவு அதிகாரி தீர்வு காணும்வரை, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு மாற்ற தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த மனு, 8-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
    Next Story
    ×