search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை (கோப்பு படம்)
    X
    மாநிலங்களவை (கோப்பு படம்)

    இலங்கை கடற்படை அத்துமீறல்... மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம்

    இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் 2 அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.

    நேற்று முதல் 2 அவைகளின் கூட்டங்களும் தனித்தனியாக நடந்து வருகின்றன. கொரோனா பிரச்சனை காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் காலையில் மேல் சபை கூட்டமும், மாலையில் மக்களவை கூட்டமும் நடந்து வருகின்றன.

    நேற்று முதல் நாளிலேயே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் குரல் எழுப்பினார்கள்.

    மற்ற அலுவல்களை நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மேலவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையிலும் விவாதம் நடத்த முடியாத நிலை இருந்ததால் பல தடவை ஒத்தி வைக்கப்பட்டது.

    மீண்டும் இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற மேலவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகள் பிரச்சனையை மீண்டும் எழுப்பின.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள், தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கொன்றது தொடர்பான பிரச்சனையை பாராளுமன்றத்தில் கிளப்பினார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் ராமேசுவரம் அருகே இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

    கடற்படை கப்பலை, மீன்பிடி படகில் மோத செய்தனர். இதில் மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு கடலில் தத்தளித்தனர். அவர்களில் 4 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. பின்னர் 4 பேரின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியதாக கூறி கடந்த 23-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தனர். அவர்களை இலங்கை ராணுவத்தினர் பிடித்து சென்று கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

    இந்த சம்பவத்தை பாராளுமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டார்கள்.

    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கூறும்போது, “இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்குவதும், கொலை செய்வதும் தொடர்ந்து நடக்கும் செயலாக இருந்து வருகிறது. இதில் மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாக இல்லாததால், அவர்களுடைய அத்துமீறல் தொடர்கிறது.

    இப்போது 4 அப்பாவி மீனவர்களை கொன்று இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலையை விட்டுவிடலாமா என்று சிந்திக்க தொடங்கி உள்ளனர். இத்தகைய படுபாதக செயல்களில் ஈடுபட்ட இலங்கையை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

    அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசும்போது, “தமிழக மீனவர்களை தாக்குவது இலங்கை ராணுவத்தின் வழக்கமான நடவடிக்கையாக இருந்து வருகிறது. உடனடியாக இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.

    இரு கட்சி எம்.பி.க்களும் தொடர்ந்து ஆவேசத்துடன் குரல் எழுப்பினார்கள். இதை தொடர்ந்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்து பேசினார்.

    தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்ட தகவலை அறிந்ததுமே மேல் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுத்தது. இலங்கை அரசுக்கு மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை கொன்றது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து இந்த விவாதம் முடிவுக்கு வந்தது.

    இதற்கிடையே விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக 16 கட்சிகள் சார்பில் பாராளுமன்ற விவகார மந்திரியிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் விவசாயிகள் பிரச்சனை சம்பந்தமாக தனியாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.

    அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் 15 மணி நேரம், தனியாக விவாதம் நடத்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது.

    இந்த தகவலை பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி வெளியிட்டார். இது சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் கூறும் போது, ‘‘நாங்கள் வைத்த கோரிக்கைளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விவாதம் நடத்துவற்கு அனுமதி அளித்துள்ளது.

    வெள்ளிக்கிழமை முதல் இந்த விவாதம் நடைபெறும். இதனால் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் மற்ற மசோதாக்கள் தாக்கல் போன்ற எந்த நிகழ்ச்சிகளும் இடம்பெறாது’’ என்று கூறினார்.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கோ‌ஷங்களை எழுப்பிய ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    Next Story
    ×