search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    கவர்னர் உரையில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளது: சித்தராமையா குற்றச்சாட்டு

    கவர்னர் உரையில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளது என்று கர்நாடக அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக பா.ஜனதா அரசின் சாதனை பூஜ்ஜியம். அதனால் தான் கவர்னர் தனது உரையில் அரசின் சாதனைகளை கூறவில்லை. கவர்னர் உரையில் இந்த அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றி எதுவும் கூறவில்லை. கவர்னர் மூலம் இந்த அரசு பொய்களை கூறியுள்ளது. கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள அரசின் சாதனைகள் எல்லாம் எங்கள் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்டது.

    இந்த அரசு அடுத்து எந்த நோக்கத்தின் அடிப்படையில் செல்ல உள்ளது என்பது பற்றி எதுவும் கூறவில்லை. மாநிலத்தின் நிதிநிலை, நீர்ப்பாசன திட்டங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. வளர்ச்சியில் கர்நாடகம் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. எல்லாவற்றுக்கும் இந்த அரசு கொரோனாவை காரணமாக கூறுகிறது. வட கர்நாடகத்தின் வளர்ச்சி குறித்து பா.ஜனதாவினர் அதிகம் பேசுகிறார்கள்.

    வட கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக மந்திரி உமேஷ்கட்டி அடிக்கடி சொல்கிறார். கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பெலகாவியில் சுவர்ண சவுதா கட்டப்பட்டது. எதற்காக அந்த கட்டிடம் அங்கு கட்டப்பட்டது?. இந்த கூட்டத்டதொடரை பெலகாவியில் நடத்தி இருக்க வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஆண்டுதோறும் 10 நாட்கள் பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்தினோம்.

    அரசின் சில அலுவலகங்களை சுவர்ண சவுதாவுக்கு மாற்றுவதாக எடியூரப்பா கூறினார். ஆனால் இதை அவர் இதுவரை செய்யவில்லை. இது வட கர்நாடக மக்களுக்கு இந்த அரசு செய்த துரோகம். கவர்னர் உரையாற்றும்போது நாங்கள் அடையாளத்திற்கு போராட்டம் நடத்தினோம். ஆண்டுக்கு ஒரு முறையாவது பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×