search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தியபோது எடுத்தபடம்.
    X
    பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தியபோது எடுத்தபடம்.

    கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது: கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்

    நடப்பு ஆண்டின் கர்நாடக சட்டசபையில் முதல் கூட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 7 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கிடையே இலாகாக்கள் மாற்றப்பட்டதால் சில மந்திரிகளும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் சிலர் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறினர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கூடுகிறது.

    இது நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

    அதன் மீது உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இறுதியில் இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளிக்கிறார். 5-ந் தேதிக்கு பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் முக்கியமாக, சிவமொக்கா வெடிவிபத்து குறித்து பிரச்சினை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    கர்நாடகத்தில் சிவமொக்காவில் நடந்த வெடி விபத்து சம்பவத்தில் 6 பேர் பலியாகினார்கள். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத கல்குவாரிகளால் இந்த சம்பவம் நடந்ததாகவும், இதில் அரசுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த சிவமொக்கா வெடி விபத்து குறித்து சட்டசபையில் பிரச்சினை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சபைக்கு வரும் உறுப்பினர்கள், அதிகாரிகளின் உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. காய்ச்சல் சோதனை மற்றும் சானிடைசர் திரவம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறும். கர்நாடக மேல்-சபையில், அரசின் பசுவதை தடை சட்ட மசோதா நிலுவையில் உள்ளது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பு மேலவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்ய ஆளும் பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஜனதா தளம் (எஸ்) பா.ஜனதாவுடன் கைகோர்த்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி, ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பா.ஜனதா முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இந்த முறை மேலவை தலைவர் நீக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு பெங்களூரு விதான சவுதாவை சுற்றி இன்று முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தொடருக்கு பிறகு இந்த மாத இறுதியில் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    Next Story
    ×