search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி.எம்.சிங்
    X
    வி.எம்.சிங்

    வன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு

    தலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இரு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு  தினத்தில் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.

    தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில்  பதற்றமான சூழல் உருவானது.  நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 பேரை கைது செய்துள்ளனர். 6 விவசாய  தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது சதி வழக்குகளும்  பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
         
    இதற்கிடையே, விவசாயிகளை அமைதி காக்குமாறு விவசாயி தலைவர்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த வன்முறைக்கு  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், போராட்டம் திசை மாறியதால் முடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. டெல்லி போராட்டத்தை  வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் சர்தார் வி.எம்.சிங் கூறியதாவது: 

    வேறு யாரோ வழிநடத்துதலுடன் ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே, அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு இந்த போராட்டத்தில் இருந்து இப்போதே விலகிக் கொள்கின்றன. 

    எங்களுக்கு எம்.எஸ்.பி. உத்தரவாதம் கிடைக்கும் வரை எதிர்ப்பு தொடரும். ஆனால் எதிர்ப்பு வேறு வடிவத்தில் செல்லாது. மக்கள் உயிரை தியாகம் செய்யவோ அல்லது அடி வாங்கவோ நாங்கள் இங்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    சில்லா எல்லையில் உள்ள பாரதிய கிசான் யூனியனின் (பானு) தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், டெல்லியில் நேற்று என்ன நடந்தது. எங்கள் 58 நாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன் என தெரிவித்தார்.
    Next Story
    ×