
கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்தவர் சகானா சத்தர் (வயது 24). இவர் பேரம்பராவில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். அவர் வார விடுமுறையை கழிப்பதற்காக சனிக்கிழமை இரவு மேப்பாடி பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அங்கு ஆழ்ந்த வனப்பகுதியில், ஒரு தங்கும் விடுதி, கடுகு தோட்டத்திற்கு அருகே, நீச்சல் குளமும், தங்கும் கூடாரமும் அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் செயல்படுகிறது. இங்கு சகானாவும், மற்ற 3 பேரும் ஒரு கூடாரத்தில் தங்கியதாக கூறப்படுகிறது. இரவு 10 மணி அளவில் அவர்கள் கூடாரத்தில் இருந்து வெளியில் வந்து உலவிக் கொண்டிருந்தனர்.
சுற்றிலும் வனப்பகுதி என்பதால் திடீரென ஒரு காட்டு யானை அந்தப்பக்கம் வந்துள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட அனைவரும் தப்பியோடினர். ஆனால் சகானா மட்டும் யானையிடம் சிக்கினார். காட்டு யானை அவரை மிதித்து நசுக்கி விட்டு ஓடியது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றபோதும், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.