search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு - கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப்பதிவு

    இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம்  கேம்பிரிட்ஜ் அனாலிடிகா. இது ஒரு அரசியல் ஆலோசனை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் லண்டன், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய இடங்களில் அமைந்து உள்ளன.

    இந்த நிறுவனம் உலகின் பல நாடுகள் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தேர்தல், வெற்றி தோல்விகளை முடிவு செய்ய உதவுகிற அல்லது மக்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்துகிற வேலையை செய்து வந்தது.

    தகவல் தொழில்நுட்பத்தில் மிகுந்த அனுபவமும், கல்வி அறிவும் பெற்ற வல்லுனர்கள் மற்றும் கருவிகள் உதவியுடன் உலகின் எந்தவொரு தகவலையும் பெறுகிற ஆற்றல், இந்த நிறுவனத்துக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

    இந்த நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களின்போது, ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்கள் 5 கோடிக்கும் மேற்பட்டோரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பின்னர் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்களை திருடி உள்ளதாக தெரியவந்தது. இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் ஒப்புக்கொண்டார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிறுவனம் இந்திய பேஸ்புக் பயனர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பேஸ்புக்கில் 335 பயனர்கள் மூலம் அவர்களது பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 5 லட்சத்து 62 ஆயிரம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது.

    பேஸ்புக் பயன்படுத்துவர்கள் அதில் எந்த பக்கங்களை ’லைக்’ செய்கின்றனர். அதில் அரசியல் ரீதியிலான பக்கங்கள் எவை? அவர்களின் அரசியல் கண்ணோட்டம் எந்த அளவில் உள்ளது என பல்வேறு தகவல்களை அவர்களின் பேஸ்புக் செயல்பாடுகள் மூலம் கண்டறிந்து குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு சாதகமாக வாக்களிக்கும் மனநிலையை உருவாக்குவது தெரியவந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் தேர்தலை மையப்படுத்தி இது போன்ற நடவடிக்கையை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மேற்கொண்டது தெரியவந்தது.

    சர்வதேச அளவில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்துமென மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், பேஸ்புக்கில் இருந்து இந்திய பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக திருடியதாக, இங்கிலாந்தை சேர்ந்த அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது இன்று சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
    Next Story
    ×