search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரம் இன்ஸ்டிடியூட் தீ விபத்து
    X
    சீரம் இன்ஸ்டிடியூட் தீ விபத்து

    சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி: தடுப்பூசி தயாரிப்பில் பாதிப்பு இல்லை எனத்தகவல்

    கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. 

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    கடும்போராட்டத்திற்குப்பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், கட்டுமானம் நடந்து வந்த இடத்தில் ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறியால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது என புனே மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

    தீ விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீரம் நிறுவனத்தின் சிஇஓ-வும் உரிமையாளருமான ஆதார் பூனவல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் தீ விபத்தால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் எந்த பாதிப்பும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×