search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன்
    X
    பேரறிவாளன்

    பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

    பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது, நீதிபதி நாகேஸ்வரராவ், ‘பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்து உள்ளது. இந்த விவகாரத்தில் கவா்னர் முடிவு எடுக்க தாமதம் காட்டுகிறார். இந்த விவகாரம் அசாதாரணமானது’ என தெரிவித்து வாதங்களை முன்வைக்க வக்கீல்களிடம் கேட்டார்.

    சுப்ரீம் கோர்ட்


    இதையடுத்து பேரறிவாளன் தரப்பு மூத்த வக்கீல் கோபால் சங்கர நாராயணன் வாதிட்டபோது, ‘பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவரது உடல்நலம் குறித்த அறிக்கையை தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் ஏற்றுக் கொண்டுள்ளது.

    பரோலை அவர் தவறாக பயன்படுத்தவில்லை. அவருக்கு வயதான பெற்றோர் உள்ளனர். பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி முடிவு எடுப்பதா?, கவர்னர் முடிவு எடுப்பதா? என்ற விவாதத்திற்கே இடமில்லை. பேரறிவாளனை விடுவிக்க பரிந்துரைத்த தமிழக அரசின் தீர்மானத்தின் மீதும், பேரறிவாளனின் கருணை மனு மீதும் கவர்னர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கும் சி.பி.ஐ.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சி.பி.ஐ. தெளிவுப்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பங்கு நிறைவடைந்துவிட்டது. யாரிடம் கருணை மனு அளிப்பது என்ற உரிமை குற்றவாளிக்கு உண்டு. தற்போது இந்த விவகாரத்தில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு நிலைப்பாட்டை மாற்றி வருகிறது. அனைத்து குற்றவாளிகளும் கருணை மனுக்களை ஜனாதிபதியிடம் தான் அளிக்க வேண்டுமா?, உத்தரபிரதேசத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்தவர்களை நன்னடத்தை பெயரில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது பேரறிவாளனுக்கும் பொருந்தும்’ என வாதிட்டார்.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் ஆஜராகி, ‘பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி தான் முடிவு எடுக்க முடியும். அவருக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது. சிறையில் உள்ள குற்றவாளிகளை விடுவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது’ என வாதிட்டார்.

    தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி தனது வாதத்தில், ‘அமெரிக்க ஜனாதிபதி் டிரம்ப் இறுதி நடவடிக்கையாக குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கும், குற்றவாளிகளை விடுவிக்கும் கருணை மனுக்களில் கையெழுத்திட்டதுபோல, இங்கும் நடந்திருக்க வேண்டும்’ என நகைச்சுவையுடன் தெரிவித்தார். இதற்கு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், ‘அப்படி நடந்திருந்தால் சிக்கலில் இருந்து காக்க உதவியிருக்கும்’ என நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×