search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளோம்- எடப்பாடி பழனிசாமி தகவல்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    டெல்லி:

    டெல்லியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ துறையில் தமிழகம் இன்று சிறந்து விளங்குகின்றது. தமிழக அரசு எடுத்த சிறந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் குறைவாக உள்ளது.

    32 மாவட்டங்களுக்கு நானே நேரில் சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் இதர துறையின ரோடு இணைந்து கொரோனா வைரஸ் பரவலை துரிதமாக தடுக்க ஆலோசனை வழங்கினேன்.

    இந்த ஆலோசனையின் படி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் இன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற் கொண்டோம். அதிக அளவில் காட்சி முகாம் நடத்தினோம். வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்று யாருக்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளித்தோம்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    2019-20-ம் ஆண்டு நீர் மேலாண்மைக்காக மத்திய அரசு விருது கொடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை நீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருக்கிறது. அண்டை மாநிலத்தில் உள்ள உபரி நீரை நம்பி தான் தமிழகம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.

    நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை கூட சில நேரத்தில் தர அண்டை மாநிலத்தினர் மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைக்கு தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது இதற்காக எங்களது அரசு குடிமராமத்து திட்டத்தை கொண்டுவந்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டன.

    இதன் காரணமாக இப்போது பருவ மழை சிறப்பாக பெய்ததால் அவை அனைத்திலும் தண்ணீர் நிரம்பியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் இன்றைக்கு நிரம்பி இருக்கின்றன. சமீபத்தில் வந்த புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். பாதிப்புக்குள்ளான விவசாயிகளை கணக்கிட்டு முதல் கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இப்போது தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்து இருக்கின்றன. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்களும் சேதம் அடைந்து இருக்கின்றன. அந்த கணக்கெடுப்பையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறேன். உடனடியாக மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்து இருக்கின்றேன். எங்களுடைய அரசு சேதம் அடைந்த பயிர்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்கும்.

    இன்றைக்கு ஏழை-எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று அறிவித்து படிப்படியாக இப்போது தொடங்கிக் கொண்டு இருக்கின்றோம்.

    நீட் தேர்வினால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் மற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டு வெறும் 6 பேர்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிந்தது.

    சுமார் 41 சதவீதம் கொண்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வெறும் 6 இடம்தான் கிடைத்தது. நானும் அரசு பள்ளியில் படித்த காரணத்தினாலே ஏழை-எளிய மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் அரசு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்து அதன் மூலமாக இன்று 313 பேர் மருத்துவ கல்வியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

    92 பேர் இன்றைக்கு பல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு கூடுதலான இடம் கிடைக்கும். 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்படும் போது அதில் ஏறத்தாழ 450 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று கருதுகிறேன். பல் மருத்துவ கல்லூரியில் 150 பேருக்கு இடம் கிடைக்கும். இந்த மருத்துவ படிப்புக்கான செலவையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

    இவ்வளவு திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    Next Story
    ×