search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா, குமாரசாமி
    X
    சித்தராமையா, குமாரசாமி

    உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்

    உத்தவ் தாக்கரேவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறியுள்ளனர்.
    பெங்களூரு :

    பெலகாவி மராட்டியத்தில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ள மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெலகாவியை மராட்டியத்தில் சேர்ப்பதாக மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இந்த எல்லை பிரச்சினையில் மகாஜன் அறிக்கையே இறுதியானது. உத்தவ் தாக்கரே, தீர்வு எட்டப்பட்ட விஷயத்தை மீண்டும் கிளறி அரசியல் செய்யக்கூடாது. இப்போது நீங்கள் சிவசேனா கட்சி தலைவர் மட்டுமல்ல, மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக பணியாற்றுகிறீர்கள். பொறுப்பான பதவியில் இருக்கிறோம் என்பதை அவர் மறக்கக்கூடாது.

    உத்தவ் தாக்கரேயின் கருத்து, அதிக பிரசங்கித்தனமானது. பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி. பெலகாவி எங்களுடையது. கர்நாடகத்தில் நீர், நிலம், மொழியை காப்பாற்றுவது நமது அனைவரின் கடமை. இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அரசியலும் செய்ய மாட்டோம். உத்தவ் தாக்கரேயின் பொறுப்பற்ற கருத்துக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தகுந்த பதிலளிக்க வேண்டும்.

    கன்னடர்கள் அமைதியை விரும்புபவர்கள். பொறுமையானவர்கள். கூட்டாட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள். நாங்கள் பொறுமையாக இருப்பதை, எங்களின் பலவீனம் என்று உத்தவ் தாக்கரே கருதக்கூடாது.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் உள்ள பெலகாவியை மராட்டியத்தில் சேர்ப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இது சீனாவின் அத்துமீறலை போல் உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் உத்தவ் தாக்கரேயின் கருத்து நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் உள்ளது.

    கர்நாடகத்தை சேர்ந்த மன்னர்கள் அந்த காலத்திலேயே மராட்டியத்தின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். கன்னடர்களின் சாதனை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. உத்தவ் தாக்கரே ஒரு முறை வரலாற்றை படித்தால், தற்போது யார், யாருடைய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர் என்பது அவருக்கு தெரியவரும். பெலகாவியில் கன்னட அமைப்பினர் நட்ட கொடி கம்பத்தை அங்குள்ள மராட்டிய அமைப்பினர் அகற்றியுள்ளனர். அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்திருந்தால், உத்தவ் தாக்கரே இத்தகைய கருத்துகளை கூறி இருக்க மாட்டார்.

    எல்லை பிரச்சினையில் மகாஜன் அறிக்கையே இறுதியானது. தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் கிளப்பி, பெலகாவியில் நல்லிணக்கத்துடன் வாழும் மக்களிடையே விஷ விதைகளை விதைப்பது தேசத்துரோக செயல் என்று சொல்ல வேண்டியுள்ளது. பெலகாவி பிரச்சினையை கிளப்பினால் கன்னடர்கள் கிளர்ந்து எழுவார்கள் என்பதை உத்தவ் தாக்கரே அறிந்துகொள்ள வேண்டும்.

    பெலகாவி கலாசார மற்றும் நிர்வாகத்தில் கர்நாடகத்தின் அடையாளம். மராட்டிய அமைப்பு மற்றும் மராட்டிய அரசுக்கு தக்க பதில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் முதல்-மந்திரியாக இருந்தபோது சுவர்ண சவுதா கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்தேன். பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உத்தவ் தாக்கரே புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சட்டசபை கூட்டத்தொடரையும் நடத்தினேன். அந்த சுவர்ண சவுதா கட்டிடத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் அதன் நோக்கம் நிறைவேறும்.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×