search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைக் ஆம்புலன்ஸ்
    X
    பைக் ஆம்புலன்ஸ்

    துணை ராணுவத்துக்கு 21 ‘பைக் ஆம்புலன்ஸ்’

    350 சிசி ராயல் என்பீல்டு கிளாசிக் மோட்டார் சைக்கிள்களில் வடிவமைக்கப்பட்டுள்ள 21 பைக் ஆம்புலன்சுகள், துணை ராணுவத்துக்கு (சி.ஆர்.பி.எப். என்னும் மத்திய ஆயுதப்படை போலீஸ்) வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில், அவர்களது வன்முறையால் பாதிக்கப்படுகிற பாதுகாப்பு படையினரை சரியான சாலை வசதிகள், வாகன வசதிகள் இல்லாத தொலைதூர பகுதிகளில் இருந்து மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.

    இந்த சிரமத்தை போக்குகிற வகையில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் துணை நிறுவனமான அணு மருத்துவம் மற்றும் சார்புடைய அறிவியல் நிறுவனம் (ஐ.என்.எம்.ஏ.எஸ்.) பைக் ஆம்புலன்சுகளை வடிவமைத்து உள்ளது.

    ரக்ஷிதா ஆம்புலன்ஸ் என்று அழைக்கப்படுகிற இந்த பைக் ஆம்புலன்சுகள், 350 சிசி ராயல் என்பீல்டு கிளாசிக் மோட்டார் சைக்கிள்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இப்படி வடிவமைக்கப்பட்ட 21 பைக் ஆம்புலன்சுகள், துணை ராணுவத்துக்கு (சி.ஆர்.பி.எப். என்னும் மத்திய ஆயுதப்படை போலீஸ்) வழங்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சி.ஆர்.பி.எப் தலைவரான ஏ.பி.மகேஷ்வரி கூறும்போது, “நக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகிற மாநிலங்கள், கிளர்ச்சிகளால் பாதிக்கப்படுகிற பகுதிகளில், நோயுற்ற வீரர்களை, படுகாயம் அடைந்த வீரர்களை மீட்டு சிகிச்சைக்கு எடுத்துச்செல்ல இந்த பைக் ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்படும்” என தெரிவித்தார். இந்த பைக் ஆம்புலன்சில், மருத்துவ சாதனங்கள், ஆக்சிஜன் கிட் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் பயணத்தின்போது குளுக்கோஸ், ஆக்சிஜன் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பைக் ஆம்புலன்ஸ் திட்டத்துக்காக மத்திய ஆயுதப்படை போலீசுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×