search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முதல் நாளிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் - மேற்கு வங்காளத்தில் சர்ச்சை

    மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முதல் நாளிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்கத்தா:

    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும், இந்த முகாம்களில் அரசியல்வாதிகள் யாரும் பங்கேற்க வேண்டாம் எனவும் பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

    ஆனால் இதையும் மீறி மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முதல் நாளிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். குறிப்பாக பர்மா பர்தமான் மாவட்டத்தில் சுபாஷ் மண்டல், ரபிந்திரநாத் சட்டர்ஜி ஆகிய எம்.எல்.ஏ.க்களும், முன்னாள் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    அதேநேரம் மாநிலத்தின் பல பகுதிகளில் சுகாதார பணியாளர்களுக்கு நேற்று தடுப்பூசி கிடைக்கவில்லை என புகாரும் எழுந்துள்ளது. இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் திருடி விட்டதாக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா குற்றம் சாட்டியிருக்கிறார்.

    எனினும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள் அனைவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்கள் முதற்கட்ட தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×