search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
    X
    நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

    நாடு முழுவதும் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

    நாடு முழுவதும் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் தொடங்கின.

    இந்த பணிக்காக அவசர கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சுமார் 1.65 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு பிரித்து அனுப்பி உள்ளது.

    நாடு முழுவதும் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    பிறகு அவர் டெல்லி மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுடன் உரையாடினார். அதன் பின்னர் மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக உரையாற்றினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக இது கருதப்படுகிறது.

    நாடு முழுவதும் மொத்தம் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இன்று மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும். முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும் அறை, தடுப்பூசி செலுத்திய பிறகு பயணாளிகளை 30 நிமிடங்கள் அமர வைத்து கண்காணிக்கும் அறை, அவசர கால மருத்துவ சிகிச்சை அறை போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடும் பணி எந்தவித குழப்பமும் இன்றி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    தடுப்பூசி போட்டுக்கொள்வதை சிரமமின்றி மேற்கொள்வதற்காக ஏற்கனவே 2 தடவை நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் சுமார் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. எனவே இன்று தடுப்பூசி போடும் பணிகள் மிக எளிதாக நடைபெற்றன.

    நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்குத்தான் முதலில் தடுப்பூசி போடப்படும். இன்று 3006 மையங்களிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் முதல் நாளான இன்று நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி பெறுகிறார்கள்.

    ஒவ்வொரு மையத்துக்கும் தடுப்பூசிகள் நேற்றே கொண்டு சென்று இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த மையங்களுக்கு வர வேண்டிய முன்கள பணியாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி முன்கள பணியாளர்கள் மையங்களுக்கு வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

    தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் கோ-வின் செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்துவதற்கான நாள், நேரம், இடம் ஆகியவை முன்கள பணியாளர்களுக்கு மிக எளிதாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது.

    மையங்களுக்கு இன்று வந்த முன்கள பணியாளர்கள் அனைவரும் அந்த கோ-வின் செயலி மூலம் உறுதிப்படுத்தப்பட்டனர். அதோடு வாக்காளர் பட்டியல் துணை கொண்டும் அவர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அதன்பிறகே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    தமிழகத்தில் 166 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்களை அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போடப்படும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 20 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் வந்துள்ளது. 160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. கோவேக்சின் தடுப்பூசியை 6 மையங்களில் பயன்படுத்தினார்கள்.

    தமிழகத்தில் 4.39 லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சம்மதம் தெரிவித்து கோ-வின் செயலியில் தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளனர். இவர்களில் 2.5 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போட்டு முடிக்கப்படும்.

    அடுத்தடுத்து தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையையும், தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளனர். 2 மாதத்துக்குள் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 2-வது தவணையாக 28 நாட்கள் கழித்து மீண்டும் தடுப்பூசி போடப்படும். இதன்மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.

    மார்ச் மாதத்துக்கு பிறகு தனியார் நிறுவனங்களுக்கும் தடுப்பூசிகளை வினியோகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×