search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்: மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்.
    பெங்களூரு :

    கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்திற்கு இதுவரை 8.14 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த தடுப்பூசிகளை போடும் பணி நாளை (அதாவது இன்று) தொடங்குகிறது. தேசிய அளவில் பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். பெங்களூரு மருத்துவ கல்லூரியில் முதல்-மந்திரி எடியூரப்பா தடுப்பூசி செலுத்துவதை தொடங்கி வைக்க உள்ளார்.

    முதல்கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போலீசாருக்கு தடுப்பூசி போடப்படும். பதிவு செய்துள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசியை கண்டு யாரும் பயப்பட தேவை இல்லை. இது முற்றிலும் பாதுகாப்பானது. ஒருவருக்கு தடுப்பூசி போட்ட நாளில் இருந்து 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படும்.

    அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி கட்டுப்பாட்டு மையம் உள்ளது. முதல்கட்டமாக தேசிய அளவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி பெறுபவர்களில் சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட பக்க விளைவுகள் வரக்கூடும். அதனால் பயப்பட தேவை இல்லை. அது தானாகவே சரியாகிவிடும். மாநிலத்தில் தற்போது 7.17 லட்சம் பேர் தடுப்பூசி பெற பதிவு செய்து கொண்டுள்ளனர்.

    மாநிலம் முழுவதும் 243 மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் பெங்களூருவில் மட்டும் 10 மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி போடப்பட்டது குறித்த தகவல் தினமும் தெரிவிக்கப்படும். தடுப்பூசி குறித்து வதந்திகள் பரவினால் அதை யாரும் நம்ப வேண்டாம். அரசு கூறும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும்.

    கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) மருத்துவத்துறையை சேர்ந்த கீழ்நிலை ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்படும் மையங்களில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இதற்கு ஊடகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதை தனியார் ஊடகத்தினர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    எடியூரப்பா குறித்த சி.டி. பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவை தான் தெரியும். நான் யாருடைய ஆதரவும் இன்றி எனது தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு யாருடைய ஆதரவும் தேவை இல்லை.

    இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
    Next Story
    ×