search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்றம்
    X
    உச்சநீதிமன்றம்

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் செல்லுமா? செல்லாதா? - சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 47-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    ஆனால், 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.

    அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

    அந்த வழக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு ரீதியில் செல்லுமா? செல்லாதா? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

    முன்னதாக, இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என தலைமை நீதிபதி பாப்டே எச்சரித்தார்.

    மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதற்காக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×