search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள் விரிவாக்கம்: எடியூரப்பா அறிவிப்பு

    கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள்(புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. எடியூரப்பாவின் மந்திரி சபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா முயற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களையும் சந்தித்து வந்தார். ஆனால் இடைத்தேர்தல், கிராம பஞ்சாயத்து தேர்தல் உள்பட பல்வேறு காரணங்களால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

    இந்த நிலையில் பா.ஜனதா மேலிடம் திடீரென முதல்-மந்திரி எடியூரப்பாவை டெல்லிக்கு அழைத்தது. அதன்பேரில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபை விரிவாக்கம், கர்நாடகத்தில் நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மேலிட தலைவர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்புக்கு பின் நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவை வந்தடைந்தார். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வருகிற 13-ந் தேதி(நாளை மறுநாள்) மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இதில் புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பாடுகள். மந்திரிகளாக பதவி ஏற்பவர்கள் யார், யார் என்ற பெயர் பட்டியல் நாளை(அதாவது இன்று) அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×