search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமித்ஷாவுடன் எடியூரப்பா சந்திப்பு : முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வலியுறுத்தியதாக பரபரப்பு

    கட்சி மேலிடம் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
    பெங்களூரு:

    கட்சி மேலிடம் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக எடியூரப்பாவிடம் வலியுறுத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. எடியூரப்பாவின் மந்திரிசபையில் 7 காலியிடங்கள் உள்ளன. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே டெல்லி சென்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து மந்திரிசபை விஸ்தரிப்புக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டார். 3 நாட்களில் அனுமதி கொடுப்பது குறித்து தகவல் தெரிவிப்பதாக கூறி எடியூரப்பாவை அனுப்பி வைத்தார். இதை கூறி 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பா.ஜனதா மேலிடம் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா மேலிடம் விடுத்த அழைப்பை ஏற்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பகல் 3 மணி அளவில் உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

    -சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அவர்கள் ஆலோசனைக்கு பிறகு எடியூரப்பா, அங்கு நிருபர்களை சந்திக்காமல் அங்கிருந்து கர்நாடக பவனுக்கு புறப்பட்டு வந்தார். அங்கும் அவர் நிருபர்களை சந்திக்கவில்லை. இதனால் கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றம் ஏற்படப்போகிறது என்ற தகவல் வெளியானது. அதாவது முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்பட்டு, புதியவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எடியூரப்பாவுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுது்து கர்நாடக பவனில் இருந்த அவர் தனது அறையில் இருந்து கீழே வந்து நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினேன். அப்போது எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோரும் உடன் இருந்தனர். கர்நாடகத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா வெற்றி குறித்த புள்ளி விவரங்களை அவர்களிடம் எடுத்துக்கூறினேன். எங்கள் தலைவர்கள் இதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கர்நாடக சட்டசபையில் காலியாக 2 தொகுதிகள், நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள பெலகாவி தொகுதி ஆகிய 3 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும். அதற்கு இப்போது இருந்து அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும். இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை இறுதி செய்து அனுப்பி வையுங்கள். அதற்கு அனுமதி அளிக்கிறோம் என்று என்னிடம் கூறினர்.

    அடுத்த தாலுகா மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கு தயாராகும்படியும், அதில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் எனக்கு அறிவுறுத்தினர். அடுத்ததாக முக்கியமாக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். இன்னும் சில நாட்களில் நல்ல செய்தி அனுப்பி வைப்பதாக என்னிடம் உறுதியளித்தனர். மந்திரிசபை விரிவாக்கமா அல்லது மாற்றி அமைக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யவில்லை. அதை பொறுத்திருந்து பாருங்கள். இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற ஆலோசனை, எனக்கு திருப்திகரமாக, மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

    மேலும் உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதுகுறித்தும் விவாதித்தோம். என்னை மாற்றுவது குறித்து பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறியுள்ள கருத்து கூறித்து நான் பேச விரும்பவில்லை. இந்த நல்ல மகிழ்ச்சியான நேரத்தில் அதுபற்றி நான் எதற்கு கருத்துக்கூற வேண்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    டெல்லியில் மேலிட தலைவர்களை சந்தித்து பேசும் எடியூரப்பா, உடனே பத்திரிகையாளர்கைள சந்தித்து, ஆலோசனையில் என்ன நடந்தது என்பதை விளக்கி கூறுவார். இது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஆனால் நேற்று எடியூரப்பா, பத்திகையாளர்களை சந்திக்காமல் நேரடியாக கர்நாடக பவனுக்கு சென்றது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் நேற்றைய கூட்டத்தில், எடியூரப்பாவை மாற்றுவது குறித்து அவரிடமே உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாகவும், அதற்கு தான் பதவி விலக எடியூரப்பா நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் எடியூரப்பாவிடம் அமித்ஷா, நீங்கள் பதவி விலகினால், உங்களை உரிய கவுரவத்துடன் பதவியில் இருந்து விடுவிப்போம் என்று எடுத்துக் கூறியுள்ளார். புதிதாக மந்திரிசபை அமைக்கப்பட்டால் எடியூரப்பாவின் மகனுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., ஆட்சி தலைமையில் மாற்றம் நடைபெறும் என கூறி வருகிறார். இந்த நிலையில் நேற்று டெல்லியில் எடியூரப்பா- அமித்ஷா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இருந்து கசிந்துள்ள தகவல், அதை உறுதி செய்வது போல உள்ளது.

    அடுத்தடுத்த நாட்களில் எடியூரப்பா மாற்றம் குறித்த தகவல் பகிரங்கமாகும். அப்போது கர்நாடக அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ள எடியூரப்பாவை பதவியை விட்டு நீக்குவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. ஆனால் எடியூரப்பா சிரித்த முகத்துடனேயே நிருபர்களிடம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×