search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டம் நடைபெறவிருந்த பகுதியை அடித்து நொறுக்கிய விவசாயிகள்
    X
    கூட்டம் நடைபெறவிருந்த பகுதியை அடித்து நொறுக்கிய விவசாயிகள்

    வேளாண் சட்டம் குறித்த கூட்டமா? முதல்மந்திரி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி மேடையை அடித்து நொறுக்கிய விவசாயிகள்

    பாஜக மூத்த தலைவரும் அரியானா முதல்மந்திரியுமான மனோகர் லால் கட்டார் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து ஒரு கிராமத்தில் ஆலோசனை நடத்தவிருந்தார்.
    சண்டிகர்:

    வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 46-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    ஆனால், 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.

    அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகளை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தற்காக கூட்டங்கள் நடத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அந்தவகையில், பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் கர்னல் மாவட்டத்தில் உள்ள கீம்லா என்ற கிராமத்தில் இந்த கூட்டம் ஒன்று இன்று நடைபெறுவதாக இருந்தது.

    இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், அரியானா முதல்மந்திரியுமான மனோகர் லால் கட்டார் பங்கேற்கவிருந்தார். ’கிசான் மகாபஞ்சாயத்து’ என பெயரிடப்பட்ட இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து கிராம மக்களிடம் மனோகர் லால் கட்டார் பேசவிருந்தார்.

    இந்த கூட்டம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிசான் மகாபஞ்சாயத்து நடைபெறவிருந்த கிராமத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளில் சிலர் நுழைய முயன்றனர். அவர்களை தடுக்க தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை போலீசார் பயன்படுத்தினர்.

    ஆனால், தடையை மீறி கிசான் மகாபஞ்சாயத்து நடைபெறவிருந்த கிராமத்திற்குள் நுழைந்த விவசாயிகள் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்து நொறுக்கினர். நாற்காலிகளையும் தூக்கி வீசினர். இந்த சம்பவத்தால் கூட்டம் நடைபெறவிருந்த இடமே கலவர பூமியாக மாறியது.

    விவசாயிகளின் இந்த கோபத்தால் கிசான் மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்பதற்கான நிகழ்ச்சியை அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் ரத்து செய்தார். இந்த சம்பவம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×