search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எல்ஏ மதன் திலாவர்
    X
    எம்எல்ஏ மதன் திலாவர்

    பறவைக் காய்ச்சலை பரப்ப சதி செய்கிறார்கள்... போராடும் விவசாயிகளை சீண்டிய பாஜக எம்எல்ஏ

    டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகள் சிக்கன் பிரியாணியை சாப்பிடுவதன் மூலம் பறவைக் காய்ச்சலை பரப்ப சதி செய்வதாக பாஜக எம்எல்ஏ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த முற்றுகைப் போராட்டம் இன்று 46-வது நாளாக நீடிக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. 

    ஆனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் அவ்வப்போது எதிர்மறையான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.

    அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    எம்எல்ஏ மதன் திலாவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-

    விவசாயிகள் என்று கூறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை. சுற்றுலா மற்றும் ஆடம்பரங்களை நன்கு அனுபவித்து மகிழ்கிறார்கள்.

    விவசாயிகள் என்று அழைக்கப்படும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த நபர்கள் எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால் கோழி பிரியாணி மற்றும் உலர்ந்த பழங்களை நன்றாக சாப்பிடுகின்றனர். பறவைக் காய்ச்சலை பரப்புவதற்கான சதி இது. 

    போராடுவதாக கூறும் அவர்களிடையே போராளிகள் மற்றும் திருடர்கள் இருக்கலாம், அவர்கள் விவசாயிகளின் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர் அனைவரும் நாட்டை அழிக்க விரும்புகிறார்கள். அவர்களை போராட்டக் களங்களில் இருந்து அரசு அகற்றாவிட்டால், பறவைக் காய்ச்சல் நாட்டில் ஒரு பெரிய பிரச்சினையாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 8 சுற்றுகளாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை 15ம் தேதி நடக்க உள்ளது.
    Next Story
    ×