search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி மம்தா பானர்ஜி
    X
    முதல் மந்திரி மம்தா பானர்ஜி

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் - மம்தா பானர்ஜி

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.

    கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6- சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கடைசியாக கடந்த 30-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. 

    எனினும் சட்டங்களை திரும்பப் பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதிபட தெரிவித்து வருகின்றனர். 

    இதற்கிடையே, டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசு இடையே 7-வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. மத்திய அரசுடன் விவசாய பிரதிநிதிகள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    விவசாய சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:

    விவசாயிகளுக்கு ஆதரவாக நான் இருக்கின்றேன். நாடு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.

    சட்டம் இயற்றுவதற்கு முன்பே, அவர்கள் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கினார்கள். அதனால் தான் சட்டங்களை திரும்பப் பெறவில்லை. அவர்களின் அரசியல் நோக்கம் தெளிவாக உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.

    ஏற்கனவே அரியானா, டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×