search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை: அருண்சிங்

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் சிவமொக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியம். தலைவர்கள், அடிமட்ட தொண்டர்களை சந்தித்து பேச வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே தேசம், ஒரே வரி முறை இருக்க வேண்டும். அதே போல் ஒரே நாடு ஒரே தேர்தலும் அவசியம். இதுகுறித்து அதிகளவில் விவாதிக்க வேண்டியது அவசியம்.

    தற்போது உள்ள நடைமுறையால் நாம் அதிக நேரத்தை தேர்தலுக்காக செலவிட வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து நடைெபெறும் தேர்தல்களால் ஆசிரியர் மற்றும் போலீஸ் சமூகம் அதிக நெருக்கடிகளை சந்திக்கிறது. வளர்ச்சி பணிகள் முடங்குகின்றன. கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது.

    அரசை குறித்து நமது கட்சியினர் வெளியில் விமர்சிக்கக்கூடாது. பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள எடியூரப்பாவுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். சிவமொக்கா பா.ஜனதாவின் கோட்டை. கர்நாடகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தாமரையை மலர வைக்க வேண்டும். இதற்காக நமது கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உழைக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தார். இதன் காரணமாக பாதிப்புகள் குறைந்தது. கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள். காங்கிரசின் முயற்சியால் சில விவசாயிகள் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடுகிறார்கள்.

    வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்வதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியது. காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது இல்லை. ஆனால் பா.ஜனதா கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரிடம் நல்ல தலைமை பண்பு இல்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா ஆதரவாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதால், கட்சி அடிப்படையில் பலமாக இருப்பது வெளிப்பட்டுள்ளது.

    இவ்வாறு அருண்சிங் கூறினார்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதா சார்பில் மக்கள் சேவை மாநாடுகளை நடத்த 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நளின்குமார் கட்டீல், துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா ஆகியோரது தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்பட மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கிடம் நிருபர்கள், எடியூரப்பாவை மாற்றுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை. இது தொடர்பாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.வின் கருத்தை பொருட்படுத்த தேவை இல்லை” என்றார்.
    Next Story
    ×