search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    இத்தகைய ஆணவம் மிகுந்த அரசு இருப்பது இதுவே முதல்முறை - சோனியா காந்தி கடும் தாக்கு

    சுதந்திரத்துக்கு பிறகு இத்தகைய ஆணவம் மிகுந்த அரசு பதவியில் இருப்பது இதுவே முதல்முறை என்று சோனியாகாந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 39 நாட்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடுமையான குளிரிலும், மழையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    அவர்களில் சுமார் 50 பேர் உயிரிழந்து விட்டனர். சிலர், வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    ஆனால், இதுகுறித்து பிரதமரோ, மத்திய மந்திரிகளோ ஒரு வார்த்தை கூட ஆறுதல் சொல்லவில்லை. உயிரிழந்த விவசாய சகோதரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு மனவலிமையை அளிக்குமாறு இறைவனை வேண்டுகிறேன்.

    சுதந்திரத்துக்கு பிறகு இத்தகைய ஆணவம் மிகுந்த அரசு பதவியில் இருப்பது இதுவே முதல்முறை. மக்களை விட்டுத்தள்ளுங்கள். விவசாயிகளின் நிலைமையை பற்றிக்கூட இந்த அரசு கவலைப்படவில்லை. ஒருசில தொழிலதிபர்களின் லாபத்தை உறுதி செய்வதே இந்த அரசின் முக்கிய செயல்திட்டமாக இருக்கிறது.

    மக்களின் நலன்களை பாதுகாப்பதுதான் ஜனநாயகத்தின் அர்த்தம் என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

    ஜனநாயகத்தில் மக்கள் உணர்வுகளை புறக்கணிக்கும் அரசு, நீண்டநாள் ஆள முடியாது. சோர்வடைய வைத்து போராட்டத்தை ஒடுக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு விவசாயிகள் அடிபணிய மாட்டார்கள்.

    இன்னும் நேரம் இருக்கிறது. மோடி அரசு தனது அதிகார ஆணவத்தை கைவிட வேண்டும். 3 வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ்பெற்று, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதுதான் ராஜதர்மம். உயிரிழந்த விவசாயிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×