search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்-ஆர்யா ராஜேந்திரன்
    X
    கமல்ஹாசன்-ஆர்யா ராஜேந்திரன்

    திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்ற கல்லூரி மாணவி ஆர்யாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

    மிகவும் இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்றுள்ள ஆர்யா ராஜேந்திரனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 52-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியும், 35வார்டுகளில் பாரதிய ஜனதா கூட்டணியும், 9 வார்டுகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றது.

    அதிக இடங்களை பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியை மீண்டும் கைப்பற்றியது. இந்தமுறை திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த பெண் உறுப்பினர்கள் பலர் தேர்தலில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    ஆனால் அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்ததால் முடவன்முகல் வார்டில் வெற்றிபெற்ற இளம் வேட்பாளரான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் மேயர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

    அதில் ஆர்யா ராஜேந்திரன் 54 ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா முன்னிலையில் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பிஎஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வரும் ஆர்யாவுக்கு 21 வயது ஆகிறது.

    இதனால் இந்தியாவிலேயே குறைந்த வயதில் மேயரானவர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியன் ஆவார். அவரது தாய் லதா எல்.ஐ.சி. ஏஜெண்டாக உள்ளார்.

    மிகக்குறைந்த வயதில் மேயரான ஆர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் மோகன்லால் ஆர்யாவை போனில் தொடர்புகொண்டு பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோல் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் கமல்ஹாசனும் மாணவி ஆர்யாவுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “மிகவும் இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்றுள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திலும் எம் ‘மாதர்படை’ மாற்றத்திற்கு தயாராகிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

    இதேபோல் அதானி குரூப் சேர்மன் கவுதம் அதானி உள்ளிட்ட பலரும் மாணவி ஆர்யாவுக்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.
    Next Story
    ×