search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை- விவசாயிகள் அறிவிப்பு

    வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடன் 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை கடந்து விட்டது.

    புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் விவசாயிகள், கொரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் போன்ற சவால்களை கருத்தில் கொள்ளாமல், டெல்லியின் எல்லைகளை ஆக்கிரமித்து போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாயிகளுடன்   மத்திய அரசு   நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகள் எந்தவித பலனையும் தரவில்லை. குறிப்பாக வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் மத்தியஅரசின் யோசனையை விவசாயிகள் நிராகரித்து விட்டார்கள்.

    எனினும் வேளாண் சட்ட பிரச்சினையில் சுமுக முடிவு காண்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும், அது குறித்து பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வரும் விவசாயிகள், அவ்வாறு உறுதியளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்து இருந்தனர்.

    இதனால் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வந்தது. அதேநேரம் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து விவசாயிகள் நீண்ட ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இது நேற்றும் நீடித்தது. குறிப்பாக 40 விவசாய அமைப்புகள் இணைந்த கூட்டு அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாவின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மத்திய வேளாண் துறை செயலாளர் விவேக் அகர்வாலுக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பினர். அதில், ‘மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தையை 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு வைத்துக்கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

    இது தொடர்பாக பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் மூத்த தலைவர் திகெயித் கூறுகையில், ‘மத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு விரும்பிய நிலையில், அதற்கான தேதி மற்றும் நேரத்தை நாங்கள் தேர்வு செய்து அறிவிக்க கூறியிருந்ததன்பேரில், வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் சம்மதித்து இருக்கிறோம். இனி எங்களை எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று முடிவு செய்வது அரசின் கையில் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

    அதேநேரம் 3 சட்டங்களையும் திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த உறுதி போன்றவற்றை பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் அரசு இணைக்க வேண்டும் என்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

    வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகிற 30-ந்தேதி குண்ட்லி-மானேசர்-பல்வால் 6 வழிச்சாலையில் விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும் எனவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

    விவசாயிகள்


    இதற்கிடையே மராட்டியத்தின் அனைத்திந்திய கிசான் மகாசபை அமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாசிக்கில் இருந்து ஏராளமான வாகனங்களில் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி போராட்டக்களத்தை அடைந்த மராட்டிய விவசாயிகளை, ஏற்கனவே போராடி வரும் விவசாயிகள் வரவேற்றனர்.

    மராட்டிய விவசாயிகளின் இந்த டெல்லி நோக்கிய வாகன பேரணியில் 21 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    இதைப்போல விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப்பில் இருந்து மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்துள்ளனர். குறிப்பாக சங்ருர், அமிர்தசரஸ், டார்ன் தரன், குர்தாஸ்பூர், பதிண்டா மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டிராக்டர்கள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்களில் டெல்லி விரைந்துள்ளனர்.

    இதனால் டெல்லி-அமிர்தசரஸ் நெடுஞ்சாலையில் விவசாயிகளின் வாகனங்களையே காண முடிகிறது. இதில் ஏராளமான முதியவர்கள் மற்றும் பெண் விவசாயிகளும் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    போராட்டத்துக்காக செல்லும் இந்த விவசாயிகள் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு செல்கின்றனர். இதனால் நீண்டகாலம் தங்குவதற்கான ஏற்பாடுகளுடன் அவர்கள் செல்வது தெரியவந்துள்ளது.

    டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்களும் களத்தில் குதித்து உள்ளனர். சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள அவர்கள் ஒலிப்பெருக்கி மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை அறிவிப்பதுடன், சமூக வலைத்தளங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களின் பாதகமான அம்சங்களை துண்டு பிரசுரங்கள் மூலமும் வெளியிட்டு வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவான மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கருத்துகள் எழுதப்பட்ட பட்டங்களை சிங்கு எல்லையில் பறக்க விட்டனர்.

    இந்த பிரசாரத்துக்கு மூளையாக செயல்பட்ட சுர்தீப் சிங் கூறும்போது, ‘இந்த பட்டங்கள் ஒருவேளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் வீடுகளை அடையலாம். அப்போது நாங்கள் என்ன விரும்புகிறோம் என்பதை அவர்கள் அறிய நேரிடலாம். அதனால்தான் பட்டங்களில் எங்கள் கோரிக்கைகளை எழுதி பறக்க விடுகிறோம்’ என்று தெரிவித்தார்.

    இது ஒருபுறம் இருக்க அரியானாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் நேற்று முன்தினம் மாநிலத்தில் பல சுங்கச்சாவடிகளில் மறியல் நடத்தினர். இதனால் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த போராட்டம் நேற்றும் பல சுங்கச்சாவடிகளில் தொடந்தது. குறிப்பாக கர்னால், சிர்சா, ரோத்தக், ஜஜ்நார் மாவட்டங்களின் பல பகுதிகளில் இந்த போராட்டம் நீடித்தது. இதனால் அந்த சுங்கச்சவாடிகளில் வாகனங்கள் இலவசமாக சென்று வந்ததை காண முடிந்தது.

    தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க விவசாயிகள் சம்மதித்து இருக்கும் நிலையில், இதற்கு அரசின் பதில் என்ன? என்பது பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×