search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி
    X
    ஜிஎஸ்டி

    ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்காக தமிழகத்துக்கு இதுவரை ரூ.3,191 கோடி கடன்

    ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்காக தமிழகத்துக்கு இதுவரை ரூ.3 ஆயிரத்து 191.24 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டுக்காக தமிழகம் உள்பட 23 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு 8-வது வார தவணையாக ரூ.6 ஆயிரம் கோடி கடன் தற்போது வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்து உள்ளது. இதில், டெல்லி, ஜம்மு கா‌‌ஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.483.40 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

    23 மாநிலங்களை தவிர்த்து மீதமுள்ள அருணாசலபிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. மூலமான வருவாயில் பற்றாக்குறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 8-வது தவணைக்கான கடன்தொகையை 4.19 சதவீத வட்டிக்கு மத்திய அரசு பெற்றுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை ரூ.48 ஆயிரம் கோடி கடனை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் மத்திய அரசு பெற்று மாநிலங்களுக்கு வழங்கி உள்ளது. இதுதவிர ரூ.1 லட்சத்து 6,830 கோடி கடனை மாநிலங்கள் கூடுதலாக பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது பகிரப்பட்ட கடன்தொகையையும் சேர்த்து தமிழகத்துக்கு இதுவரை ரூ.3 ஆயிரத்து 191.24 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் ரூ.9,627 கோடி கடனை கூடுதலாக பெற அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×