search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    போராடும் விவசாயிகளின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கம்

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பேஸ்புக் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கிய விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். டெல்லி புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மத்திய அரசு நடத்திய  பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை ஏற்க மறுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பேஸ்புக் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் திடீரென முடக்கியது. இதேபோல் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது. 

    இந்த தளங்கள் வழியாக போராட்டக்களத்தில் நடக்கும் தகவல்களை அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது. நேற்றைய போராட்டத்தை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்டனர். திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்றும், அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்றும் விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறினார். அதன் பிறகே அவர்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த விவகாரம் விவசாயிகள்  மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு  கிசான் ஏக்தா மோர்ச்சாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக பேஸ்புக் கூறியது. ஆனால் பேஸ்புக் பக்கம் ஏன் அகற்றப்பட்டது என்பதற்கான தெளிவான காரணத்தை குறிப்பிடவில்லை.
    Next Story
    ×