search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்சவர்தன்
    X
    ஹர்சவர்தன்

    மக்கள் அனைவரையும் தடுப்பூசி சென்றடைய துரித திட்டம் அவசியம் - ஹர்சவர்தன் தகவல்

    இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி சென்றடைய துரித தடுப்பூசி திட்டம் அவசியம் என மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை நேற்று 1 கோடியை கடந்திருக்கும் நிலையில், பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கின்றன. இந்த சோதனைகளை முடித்து மக்களுக்கு தடுப்பூசியை விரைவாக போடுவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

    இதில் முன்னுரிமை அடிப்படையில் மக்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக திட்டம் வகுப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

    இந்தநிலையில் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் நேற்று உயர்மட்ட மந்திரிகள் குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். கொரோனா தொடர்பாக நடந்த இந்த 22-வது கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் கொரோனா பரவல் விகிதம் 2 சதவீதம் குறைந்திருக்கிறது. அதைப்போல இறப்பு விகிதமும் உலக அளவில் மிகவும் குறைவாக 1.45 என்ற விகிதத்திலேயே இருக்கிறது.

    அதேநேரம் குணமடைதல் விகிதம் 95.46 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 10 லட்சம் பரிசோதனைகளில் ஒட்டுமொத்த சாத்திய விகிதம் 6.25 ஆகவே நீடிக்கிறது.

    பரிசோதனை அதிகரிப்பு, கண்டறிதல் மற்றும் சிறப்பான சிகிச்சை போன்ற கொள்கைகளால் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்ட போதும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனாவின் புதிய வேகம் எதுவும் கண்டறியப்படவில்லை.

    இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள (சுமார் 30 கோடி) மக்களை விரைவில் தடுப்பூசி சென்றடைய துரித தடுப்பூசி திட்டம் ஒன்று அவசியம்.

    இவ்வாறு ஹர்சவர்தன் கூறினார்.

    முன்னதாக நாட்டின் கொரோனா நிலவரம் மற்றும் அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்ட கொள்கைகளால் விளைந்த பலன்கள் உள்ளிட்ட அம்சங்களை தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் டாக்டர் சுஜீத் சிங் அறிக்கையாக அளித்தார்.

    இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மந்திரிகள் ஹர்தீப் சிங் புரி, அஸ்வினி குமார் சவுபே, நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் பால், பிரதமரின் ஆலோசகர்கள் அர்ஜீத் சின்கா, பாஸ்கர் குல்பே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×