search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா
    X
    நித்யானந்தா

    அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் வாழும் இடமாக கைலாசா நாடு மாறும்- நித்யானந்தா

    ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் கைலாசா கட்டமைக்கப்படும் என புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா பேசியுள்ளார்.
    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்கள் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் அவர் கடல் மார்க்கமாக நேபாளம் வழியாக தப்பி சென்றதாக தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் அவரை பிடிக்க சர்வதேச போலீசார் (இன்டர்போல்) உதவியுடன் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    இதற்கிடையே நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டார். அதில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர் அந்நாட்டில் குடியேற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்தார்.

    தொடர்ந்து வெளியிட்ட வீடியோக்களில் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி, போலீசாரை கிண்டல் செய்தார். பெண் சீடர்களுடன் தலைமறைவான அவர் தென்அமெரிக்கா கண்டத்தில் ஒரு தீவை விலைக்கு வாங்கி குடியேறியதும், சர்வதேச போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக சொகுசு கப்பல்களில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா நாட்டுக்கு வரவேண்டும். அங்கிருந்து கைலாசா நாட்டுக்கு சொந்தமான தனி விமானங்கள் மூலம் கைலாசா தீவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

    3 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவர். இந்த விமான பயணம் முற்றிலும் இலவசம் என கூறியிருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த நிலையில் நித்யானந்தா புதிதாக வெளியிட்ட வீடியோவில் கைலாசா நாடு குறித்து மேலும் பல புதிய தகவல்களை கூறி இருக்கிறார். அதில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:-

    முதல் மனிதனின் பூர்வீகம் ஆதி குமரி கண்டமே. குமரி கண்டம் இருந்தது உண்மை. அந்த குமரி கண்டத்தின் உச்சம் தான் தற்போதைய ஆஸ்திரேலியாவும், ஆப்பிரிக்காவும், மடகாஸ்கரும், இந்தியாவும், இலங்கையும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    பரமசிவ பரம்பொருள் தானே நேரடியாக பூமிக்கு இறையனாராக சுந்தரேசபெருமாள் சொக்கநாதனாக வந்திருந்து ஆதிபாண்டிய மன்னாய் இருந்து மனித சமூகத்தை நிறுவினார் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம்.

    பெரும்பேறுபெற்ற இந்த ஞானபரம்பரை கைலாயமாக மலர்ந்தாக வேண்டிய, மறுமலர்ச்சி செய்யப்பட்டு, உலகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய காலம் வந்து விட்டது. இதனால் இந்த கைலாயம் மலர்ந்திருக்கிறது.

    ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் கட்டமைக்கப்படும். பரமசிவ பரம்பொருள் குமரி கண்டம் செய்தபோது என்னவெல்லாம் இறை இயல் விஞ்ஞானங்கள், மொழியியல் ஞானங்கள், அரசியல், அறிவியில், புவியியல், வரலாறு, வரலாறு சார்ந்த அறிவியல் என எல்லாதுறைகளிலும் அவர் அளித்த வாழ்க்கை முறைகளை புனரமைப்பு செய்து அவைகள் மூலமாக மனித இனத்திற்கு எல்லா சாத்தியமான சேவைகளை செய்துவதுதான் கைலாயத்தின் நோக்கம்.

    ஏன் கைலாயம் தேவை என்பதற்கு 1008 காரணங்களை அடுத்தடுத்த சத்சங்கங்களில் விளக்குகிறேன். முதல் காரணம் ஒன்றை உங்களோடு பகிர்கிறேன்.

    குமரி கண்டத்தின் மறுமலர்ச்சியே கைலாசம், மகா கைலாசம். பரமசிவ பரம்பொருள் நேரில் வந்து பூமியில் மலர செய்ததுதான் குமரி கண்ட வாழ்க்கை முறை. அதை மீண்டும் மலர செய்வதுதான் கைலாயத்தின் நோக்கம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
    Next Story
    ×