search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி ஐகோர்ட்
    X
    டெல்லி ஐகோர்ட்

    விவசாயிகளுக்கு எதிரான பொதுநல வழக்கை விசாரிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

    போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிரான பொதுநல வழக்கை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    புதுடெல்லி:

    டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 

    இந்நிலையில், டெல்லியின் எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் போராட்டங்கள் டெல்லி மற்றும் டெல்லி தலைநகர பிராந்தியத்தில்  தாக்கத்தை ஏற்படுத்துவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். 

    இந்த பொதுநல வழக்கு மனுவில் உள்ள அம்சங்களை படித்துப் பார்த்த நீதிபதிகள், இது பொதுநல வழக்கா அல்லது விளம்பரம் தேடும் வழக்கா? என கேள்வி எழுப்பினர்.

    விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை நடைபெறுவதால், இந்த மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.

    போராட்டத்தினால் டெல்லி மற்றும் டெல்லி தலைநகர பிராந்தியத்தில் பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப், அரியானா மற்றும் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என கூறினர்.

    Next Story
    ×