search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சிமாநாட்டில் பங்கேற்ற மோடி, ஷேக் ஹசீனா
    X
    உச்சிமாநாட்டில் பங்கேற்ற மோடி, ஷேக் ஹசீனா

    இந்தியா-வங்கதேசம் காணொளி உச்சிமாநாடு: இரு நாடுகள் இடையே புதிய ரெயில் பாதை திறப்பு

    இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான ரெயில் பாதை இணைப்பை இரு நாடுகளின் பிரதமர்கள் காணொளி வாயிலாக துவக்கி வைத்தனர்.
    புதுடெல்லி:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையே, காணொளி வாயிலாக இன்று உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர். மேலும், கொரோனா காலத்திற்கு பிந்தைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேசினர். 

    இரு பிரதமர்களும் இணைந்து மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்தனர். மேலும், ஷேக் முஜிபுர் ரஹ்மான் குறித்த நினைவு தபால் தலையை வெளியிட்டனர். இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான சிலாஹதி-ஹல்திபரி ரெயில் பாதை இணைப்பையும் துவக்கி வைத்தனர். 

    இந்த உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பேசியதாவது:-

    அண்டை மாநிலங்களுக்கு முன்னுரிமை என்ற எங்களின் கொள்கையின் குறிப்பிடத்தக்க தூண் வங்கதேசம் ஆகும். நான் பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கிறேன். 

    மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை நான் வெளியிடுவது பெருமை அளிக்கிறது. இந்த கண்காட்சிகள் தொடர்ந்து நம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசியதாவது:- 

    போரில் உயிர்த்தியாகம் செய்த 3 மில்லியன் தியாகிகளுக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன். 1971 போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய ஆயுதப்படை வீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். எங்கள் விடுதலைக்காக முழு மனதுடன் ஆதரவளித்த இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்

    உங்கள் அரசாங்கம் கொரோனா தொற்றுநோயை சிறப்பாக எதிர்கொண்ட விதத்திற்காக, உங்களுக்கு (மோடி) எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×