search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவில்
    X
    சபரிமலை கோவில்

    சபரிமலையில் 30 நாளில் 42,480 பக்தர்கள் சாமி தரிசனம்

    சபரிமலை கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதியில் இருந்து, கார்த்திகை மாதத்தின் இறுதி நாளான நேற்று வரையிலான 30 நாட்களில் மொத்தம் 42 ஆயிரத்து 480 பக்தர்களே சாமி தரிசனம் செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்தமாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள்(16-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனத்துக்கு ஆன்-லைனில் முன்பதிவு அவசியம், 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம், பம்பை மற்றும் சன்னிதானத்தில் தங்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளன.

    அது மட்டுமின்றி பக்தர்கள் கூட்டத்தை தடுக்க சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும், மற்ற தினங்களில் 2ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய நேரமான மண்டல பூஜை காலத்தில், வெறும் 2ஆயிரம் பேருக்கு மட்டுமே தினமும் அனுமதி வழங்கப்படுகிறது.

    இதனால் வழக்கமாக ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த ஆண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. மண்டல பூஜைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆன்-லைனில் முன் பதிவு செய்தவர்களில் 25 சதவீதத்தினர் சபரிமலைக்கு வருவதில்லை. கொரோனா அச்சம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளால் முன்பதிவு செய்த பக்தர்கள் சபரிமலைக்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள் என தெரிகிறது.

    பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட கடந்த மாதம் 16-ந் தேதியில் இருந்து, கார்த்திகை மாதத்தின் இறுதி நாளான நேற்று(15-ந்தேதி) வரையிலான 30 நாட்களில் மொத்தம் 42ஆயிரத்து 480 பக்தர்களே சபரிமலைக்கு வந்திருக்கின்றனர்.

    பக்தர்கள் மிகக்குறைந்த அளவே வருவதால் வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. மண்டல காலத்தில் தினமும் கோடியை தொடும் உண்டியல் வருமானம், தற்போது தினமும் லட்சத்தையே எட்டுகிறது. வருமானத்தை காட்டிலும் செலவு 10 மடங்கு அதிகமாக ஏற்படுவதாக தேவசம்போர்டு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×