search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு
    X
    சுப்ரீம் கோர்ட்டு

    கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

    கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு உரிய ஓய்வு அளிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை, இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம்செய்தல் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவுசெய்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.

    மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘கொரோனா சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தோம். அதனடிப்படையில் கிடைத்த அறிக்கைகளின் தொகுப்பை சமர்ப்பித்துள்ளோம்’ என்றார்.

    அப்போது நீதிபதிகள், கொரோனா மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை குறித்தும், தீ தடுப்பு நடவடிக்கைகளை குறித்தும் எந்த ஒரு மாநிலமும் விவரங்களை அளிக்கவில்லையே? என கேட்டனர்.

    அதற்கு துஷார் மேத்தா, ‘குஜராத் மாநிலத்தில் மொத்தம் 328 கொரோனா மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீ தடுப்பு ஆய்வுக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

    அப்போது, குஜராத்தில் 214 மருத்துவமனைகளில் 61 மருத்துவமனைகள் தீயணைப்பு துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழை பெறவில்லையே? இந்த மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நேரிட்டால் நோயாளிகளின் நிலை என்னாவது? என நீதிபதிகள் கேட்டனர்.

    தீயணைப்பு துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறாத மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கலாம். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இதுபோன்ற மருத்துவமனைகளும் தேவைப்படுகின்றன என துஷார் மேத்தா பதில் அளித்தார்.

    அதற்கு நீதிபதிகள், தீயணைப்பு துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறாத மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. கொரோனா மருத்துவமனைகள் சிகிச்சை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீ பாதுகாப்பு ஆய்வறிக்கையையும், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் விவரங்களையும் மாநிலங்கள் அளிக்க வேண்டும் என்றனர்.

    மேலும், முககவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என துஷார் மேத்தா தெரிவித்தார்.

    அரசியல் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அவற்றுக்கான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக துஷார் மேத்தா கூறினார்.

    கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளதே? அவர்கள் கடந்த ஏழு, எட்டு மாதங்களாக தொடர்ந்து பணிசெய்து வருகின்றனர். டாக்டர்களுக்கு உரிய ஓய்வு அளிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் ஆலோசித்து தெரிவிக்கவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதுகுறித்து கவனத்தில் கொள்ளப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

    அதையடுத்து, நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பான உத்தரவுகளை வெள்ளிக்கிழமை பிறப்பிக்கிறோம் என தெரிவித்தனர்.
    Next Story
    ×