search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால்

    உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் - கெஜ்ரிவால் அறிவிப்பு

    2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என அக்கட்சி தலைவரும் டெல்லி முதல்மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சி 2012 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலால் டெல்லியில் தொடங்கப்பட்டது. ஊழலை ஒழிப்பதே பிரதான நோக்கமாக கொண்டு 2013 டெல்லி தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது.

    அந்த தேர்தலில் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. அதன்பின் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்மந்திரியானார். பின்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டது.

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்மந்திரியாக பதவியேற்றார். 

    பின்னர் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் 62 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்மந்திரியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தங்கள் கட்சி அலுவலகங்களை திறந்து கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டது.  

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத்தே மீண்டும் முதல்மந்திரி வேட்பாளராக போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்த்டக்கது. 
    Next Story
    ×