search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் 3 நிபந்தனை

    டெல்லியில் இன்று 20-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் இன்று 20-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்திய அரசு ஏற்கனவே இவர்களுடன் 5 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    எனவே போராட்டத்தை தீவிரமாக்கி உள்ள விவசாயிகள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

    அடுத்ததாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விதவிதமான போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய அரசு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    இது சம்பந்தமாக மத்திய விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-

    வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சாதகமாகவே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் பலவகையிலும் முன்னேற்றம் காணும்.

    விவசாயிகளுடன் ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். இதன் அடிப்படையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். விவசாய சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றன.

    அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி விரைவில் தேதி முடிவு செய்யப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுசம்பந்தமாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியதாவது:-

    நாங்களும் மத்திய அரசுடன் மீண்டும் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் மத்திய அரசு எங்களுடைய 3 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.

    1. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த அம்சங்கள் தொடர்பாக மீண்டும் பேச கூடாது.

    2. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை என்ன பேச போகிறோம் என்பது பற்றிய முழு விவரங்கள் கொண்ட புதிய அஜெண்டாவை தயாரிக்க வேண்டும்.

    3. புதிதாக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக முக்கியமாக பேசியே ஆக வேண்டும்.

    இவ்வாறு விவசாய சங்கத்தினர் கூறினார்கள்.

    மற்றொரு தலைவர் கவிதா கருகந்தி கூறும்போது, 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதுடன், மின்சார சட்டத்தையும் வாபஸ் பெற்றே தீர வேண்டும். பேச்சுவார்த்தை எங்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றார்.

    இதற்கிடையே 5 மாநிலங்களைச் சேர்ந்த 10 விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து பேசினார்கள். அவர்கள் போராட்டத்துக்கு எதிராக இருப்பவர்கள். அந்த சங்கத்தினர் மத்திய அரசின் சட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தோமரிடம் உறுதி அளித்தனர்.

    பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடக்க உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    தற்போது அருகில் உள்ள உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் இருந்து டெல்லி நகருக்கு வரும் சாலைகள் பலவற்றை அவர்கள் முடக்கி இருக்கிறார்கள்.

    அடுத்த கட்டமாக டெல்லி நகருக்கு வரும் அனைத்து சாலைகளையும் முடக்கும் திட்டத்துடன் உள்ளனர். மேலும் ரெயில் மறியல் போராட்டத்தையும் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    அடுத்த சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இந்த போராட்டங்களை கையில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×