search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொப்பலில் அரசு பஸ் இயங்கியதையும், அதில் பயணம் செய்ய பயணிகள் வரிசையில் நின்று ஏறியதையும் படத்தில் காணலாம்.
    X
    கொப்பலில் அரசு பஸ் இயங்கியதையும், அதில் பயணம் செய்ய பயணிகள் வரிசையில் நின்று ஏறியதையும் படத்தில் காணலாம்.

    கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

    கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடத்தொடங்கின.
    பெங்களூரு :

    கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று கோரி கடந்த 10-ந் தேதி பெங்களூருவில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர்.

    ஊர்வலத்தின் இறுதியில் போக்குவரத்து ஊழியர்களின் பிரதிநிதிகள், விதான சவுதாவுக்கு சென்று போக்குவரத்து துறையை நிர்வகித்து வரும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியை நேரில் சந்தித்து மனு கொடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை லட்சுமண் சவதி சந்திக்கவில்லை. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து, தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது தடைப்பட்டுள்ளதால் வணிக நடவடிக்கைகளும் முடங்கின.

    அலுவலகங்கள் செல்வோர், மருத்துவமனைகளுக்கு செல்கிறவர்கள், சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் சந்துரு மற்றும் நிர்வாகிகளுடன் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது தவிர்த்து மீதமுள்ள 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு சம்மதம் தெரிவித்தது.

    இதை தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டதாகவும், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டதாகவும் துணை முதல்-மந்திரி லட்மசுண் சவதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின. ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் சந்துரு, அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததால், வேலை நிறுத்தத்தை தொடருவதாக அறிவித்தார். இதனால் போக்குவரத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் பஸ்களின் சேவையும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட மந்திரிகள் போராட்டக்காரர்கள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று காலை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சில பகுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அவ்வாறு இயக்கப்பட்ட பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா பகுதியில் ஒரு பஸ் மீதும், பீதரில் 2 பஸ்கள் மீதும் கல்வீசப்பட்டன. இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பவை பெங்களூருவில் உள்ள அவரது காவேரி இல்லத்தில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

    போராட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தும் கர்நாடக விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகரிடம் நாங்கள் பேச மாட்டோம் என்று லட்சுமண் சவதி கூறி வந்தார். ஆனால் நேற்று அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டு கோடிஹள்ளி சந்திரசேகரை செல்போனில் அழைத்து பேசினார். அப்போது 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாகவும், அதற்காக அரசு கடிதம் மூலம் எழுதி கொடுப்பதாகவும் லட்சுமண் சவதி உறுதியளித்தார்.

    பின்னர் பி.எம்.டி.சி. தலைவர் நந்தீஸ்ரெட்டி பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்ட களத்திற்கு நேரில் வந்து, கோடிஹள்ளி சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அரசின் வாக்குறுதி கடிதத்தை கொடுத்தார். இதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து லட்சுமண் சவதி நேரில் வந்து விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் பிடிவாதமாக கூறினர். இறுதியில் அரசு கடிதம் மூலம் வழங்கிய வாக்குறுதியை ஏற்று வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கோடிஹள்ளி சந்திரசேகர் அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் பெங்களூருவில் ஊழியர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

    “நாங்கள் முன்வைத்த 10 கோரிக்கைகளில் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற 3 மாத காலஅவகாசம் அரசுக்கு வழங்கப்படுகிறது. அதற்குள் அரசு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் 3 மாதத்திற்கு பிறகு மீண்டும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

    எங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்துள்ள அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் முக்கியமான கோரிக்கையான போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்படியே தான் உள்ளது. வரும் நாட்களில் அந்த கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்.

    கடந்த 4 நாட்களாக பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எதிராக ஒட்டுமொத்த மந்திரிசபையும் கடுமையாக விமர்சனம் செய்தது. எனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்தனர். அதை கண்டு பயப்படுபவன் நான் அல்ல.”

    இவ்வாறு கோடிஹள்ளி சந்திரசேகர் கூறினார்.

    4 நாட்களாக நீடித்து வந்த வேலை நிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் வாபஸ் பெற்றதை அடுத்து மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் நேற்று மாலையே ஓடத்தொடங்கின. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
    Next Story
    ×