search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - கர்நாடகாவில் 4-வது நாளாக நீடிக்கும் பஸ் ஊழியர்கள் போராட்டம்

    அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் கர்நாடகாவில் 4-வது நாளாக பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி கடந்த 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அதைத்தொடர்ந்து துணை முதல்மந்திரி லட்சுமண் சவதி முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் லட்சுமண் சவதி விகாச சவுதாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் மூத்த மந்திரிகளான வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, பி.எம்.டி.சி. தலைவர் நந்தீஸ்ரெட்டி, கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத், பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் ஷிகா உள்பட உயர் அதிகாரிகள், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் அனந்த சுப்பாராவ், சி.ஐ.டி.யு. உள்பட 5 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் லட்சுமண் சவதி நிருபர்களிடம் கூறுகையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது, பணியின்போது கொரோனா தாக்கி மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்குவது உள்பட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அரசு ஊழியர்களாக்கும் கோரிக்கையை சாத்தியமில்லை என்று கூறிவிட்டோம் என்று கூறினார்.

    அரசு ஊழியராக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டதால் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று 4-வது நாளாக கர்நாடகாவில் பஸ் போக்குவரத்து பாதிக்கபப்ட்டுள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் சுமார் 25 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பஸ்கள் அடங்கும். ஒரு சில பஸ்கள் மட்டுமே ஓடின. பஸ்களை இயக்கினால் கல்வீசி தாக்குவோம் என்று போராட்டம் நடத்தும் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்ததால் குறைந்த அளவில் ஓடிய பஸ்களும் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து ஊழியர்கள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். பனசங்கரி பஸ் நிலையம் அருகேயும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுதந்திர பூங்காவில் ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். சுழற்சி அடிப்படையில் ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

    பஸ்கள் ஓடாததால் நகரின் இதய பகுதியான மெஜஸ்டிக்கில் உள்ள பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் மெஜஸ்டிக்கை சுற்றியுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பஸ் ஊழியர்கள் போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.30 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து கழகங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓடுகின்றன. அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

    Next Story
    ×