search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம் - அயோத்தி ராமர் கோவில்
    X
    கோப்புப்படம் - அயோத்தி ராமர் கோவில்

    அயோத்தி ராமர் கோவில் அஸ்திவாரப் பணி : 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு

    அயோத்தியில் ராமர் கோவில் அஸ்திவார அமைப்பு பணியை கண்காணிக்க நாட்டின் முன்னணி பொறியாளர்கள், கட்டிட அமைப்பு நிபுணர்கள் 8 பேர் அடங்கிய குழுவை ராமர் கோவில் கட்டுமான குழு அமைத்துள்ளது.
    அயோத்தி:

    அயோத்தியில் ராமர் கோவில் அஸ்திவார அமைப்பு பணியை கண்காணிக்க நாட்டின் முன்னணி பொறியாளர்கள், கட்டிட அமைப்பு நிபுணர்கள் 8 பேர் அடங்கிய குழுவை ராமர் கோவில் கட்டுமான குழு அமைத்துள்ளது.

    இதுதொடர்பாக அயோத்தி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேத் குப்தா நேற்று தெரிவித்ததாவது:-

    “ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அஸ்திவார அமைப்பை ஆய்வுசெய்யவும், தகுந்த பரிந்துரைகளை அளிக்கவும் தத்தமது துறைகளில் தேர்ந்த பொறியாளர்களை கொண்ட நிபுணர் குழுவை ராமர் கோவில் கட்டுமான குழு அமைத்துள்ளது.

    இந்த நிபுணர் குழுவுக்கு டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் வி.எஸ்.ராஜு தலைவராக இருந்து அஸ்திவார பணிகளை மேற்பார்வை செய்வார்.

    குழுவில், ரூர்க்கி மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் என்.கோபால்கிருஷ்ணன், சூரத் என்.ஐ.டி. இயக்குனர் எஸ்.ஆர்.காந்தி, கவுகாத்தி ஐ.ஐ.டி. இயக்குனர் டி.ஜி.சீத்தாராம், டெல்லி ஐ.ஐ.டி. ஓய்வுபெற்ற பேராசிரியர் பி.பட்டாச்சார்ஜி, இந்திய போக்குவரத்துக் கழக ஆலோசகர் ஏ.பி.முல், சென்னை ஐ.ஐ.டி.யின் மனு சந்தானம், மும்பை ஐ.ஐ.டி.யின் பிரதீப்த் பானர்ஜி ஆகியோரும் இடம்பெற்றிருப்பர்.

    புவிதொழில்நுட்ப அடிப்படையிலான பல்வேறு ஆலோசனைகளின் அடிப்படையில், மிக உயர்ந்த தரத்துடன், வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும் வகையில் ராமர் கோவிலை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

    ராமர் கோவில் கட்டுமான இடத்தில் தரைக்கு சில அடி கீழே மணற்பாங்காக காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவில் கட்டுமான குழு தலைவரான நிருபேந்திர மிஸ்ரா, கடந்த வாரம் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில், அஸ்திவார திட்டத்தை இறுதி செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அப்போது, கோவில் ‘லே-அவுட்’ திட்டம் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்க எல் அண்ட் டி மற்றும் டாடா கன்சல்டிங் என்ஜினீயர்ஸ் நிறுவன கட்டுமான நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டது.
    Next Story
    ×