search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    போராட்டம் விவசாயிகளின் கை மீறி சென்றுவிட்டது போன்று தெரிகிறது - மத்திய மந்திரி பேச்சு

    மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளிடமிருந்து போராட்டம் விடுதலையானால் வேளாண் சட்டங்கள் தங்கள் நலனுக்கு ஆதரவாகத்தான் உள்ளது என்பதை விவசாயிகள் புரிந்துகொள்வார்கள் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இதுவரை நடைபெற்ற 5 பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. 

    இதற்கிடையே 3 சட்டங்களிலும் தேவையான திருத்தங்கள் செய்ய தயார் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகள் தரப்பில் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மேலும் விவசாயிகளை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

    டெல்லியை நோக்கி நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் மீண்டும் திரண்டு வந்ததால் நேற்று இரவு முதல் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து டெல்லி எல்லை பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

    விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பி கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்துள்ளன. உளவுத்துறையின் தகவலையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு 24 மணி நேரமும் தயாராக உள்ளது. மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து போராட்டம் விடுதலையானால் வேளாண் சட்டங்கள் நாட்டு நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை விவசாயிகள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். 

    அதற்கு பின்னரும் விவசாயிகளுக்கு எதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். 

    பெரும்பாலான விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என எனக்கு நம்பிக்கை உள்ளது. சில விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் மீது சந்தேகங்கள் இருக்கலாம் அவை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.

    ஒரு கருத்தை கூறிவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை மேடையில் இருந்து வெளியேறுவதால் எந்த தீர்வும் எட்டப்படாது. இதன் மூலம் போராட்டம் விவசாயிகளின் கை மீறி சென்றுவிட்டது போன்று தெரிகிறது.

    என்றார். 
    Next Story
    ×