search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரணாப் முகர்ஜி
    X
    பிரணாப் முகர்ஜி

    2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தில் தகவல்

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தகத்தில், 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பிரதமர் பதவிக்கு சோனியா காந்தி பெயர் பரிசீலிக்கப்பட்டது. இந்தியர் அல்லாத ஒருவரை பிரதமராக தேர்வு செய்யக்கூடாது என்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக அவர் பதவியேற்கவில்லை. 

    அந்த நேரத்தில் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜியின் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபட்டது. இருப்பினும் யாரும் எதிர்பாராதவிதமாக மன்மோகன் சிங் பிரதமராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து 2009 ம் ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும் மன்மோகன் சிங்கே பிரதமராக தொடர்ந்து 10 ஆண்டுகள் நீடித்துவந்தார்.

    பிரணாப் முகர்ஜி நிதி மந்திரி மற்றும் உள்துறை மந்திரியாக பணியாற்றி வந்தார். இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

    அதன்பின் 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. அமோகமாக வெற்றி பெற்ற போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் பிரணாப் முகர்ஜி.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 84 வயதில் காலமானார்.

    இந்நிலையில், 2004 பாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமராகியிருந்தால் 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்காது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி இருந்ததாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி எழுதியுள்ள பிரெஸிடென்சியல் இயர்ஸ் என்னும் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் போது நடைபெற்ற சம்பவங்களை குறித்து பிரெஸிடென்சியல் இயர்ஸ் என்னும் புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2021 ஜனவரி மாதம் வெளி வர உள்ளது. இந்த புத்தகத்தில் அவர் கூறி இருப்பதாவது:

    2004-ம் ஆண்டு  பாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமாகியிருந்தால் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் என்னிடம் கூறி இருந்தனர். சோனியா காந்தியை பொறுத்த வரையில் கட்சியின் உள் விவகாரங்களை கையாள முடியவில்லை என கூறி உள்ளார்.

    மேலும் தான் பணிபுரிந்த இரண்டு பிரதமர்களையும் - மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடியை கொண்டும் ஒப்பிடுகிறார். அதில், பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் எம்.பிக்களுடன் தொடர்பில்லாமல் இருந்ததும் ஒரு வித காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் ஒட்டுமொத்த நிலை என்பது பிரதமரின் செயல்பாட்டையும் அவரது நிர்வாகத்தையும் பிரதிபலிக்கிறது என குறிப்பிட்டுள்ள பிரணாப், மன்மோகன் சிங் கூட்டணியைக் காப்பாற்றுவதில் ஆர்வமாக இருந்தார். இது அவரது ஆளுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார். 

    மோடி தனது முதல் பதவிக்காலத்தில் ஒரு சர்வாதிகார பாணியிலான ஆட்சியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அரசாங்கம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான கசப்பான உறவை நாம் காணலாம். இந்த அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நல்ல புரிதல் இருக்கிறதா என்பதை காலம் மட்டுமே பதில் சொல்லும்.

    முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு முதன்முறையாக வெளியிட்ட புத்தகத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது வருத்தப்பட்டதாகக் கூறி இருந்த பிரணாப் பின்னாளில் மன்மோகன்சிங் என்னை மதித்தார். எங்களுக்குள் ஒரு பெரிய நட்பு இருக்கிறது. அது வாழ்நாள் வரையில் தொடரும் என கூறி இருந்தார். 
    Next Story
    ×