search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டக்களத்தில் விவசாய சங்க நிர்வாகிகள்
    X
    போராட்டக்களத்தில் விவசாய சங்க நிர்வாகிகள்

    ஜியோ சிம் தேவையில்லை... அதானி, அம்பானியின் பொருட்களை புறக்கணிக்கும் விவசாயிகள்

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகள், வரும் 14ம் தேதி நாடு முழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப  பெற வலியுறுத்தி டெல்லி மற்றும் டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சட்டங்களை திரும்ப பெறுவதற்கு தயாராக இல்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சில திருத்தங்களை மட்டுமே செய்ய முன்வந்துள்ளது. 

    இந்த திருத்தங்கள் தொடர்பான வரைவு அறிக்கை விவசாய சங்க நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த விவசாயிகள், மத்திய அரசின் திருத்தங்களை ஏற்க மறுத்துள்ளனர். அத்துடன் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக கூறி உள்ளனர். வரும் 14ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். 14ம் தேதி பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அதானி மற்றும் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சேவைகள் அனைத்தையும் புறக்கணிக்க உள்ளதாக விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறி உள்ளனர். குறிப்பாக ஜியோ சிம் கார்டை புறக்கணிப்பதாக கூறுகின்றனர். அத்துடன் ஜியோ சேவையில் இருந்து மற்ற நிறுவனங்களின் சேவைக்கு மாறும்படி பொதுமக்களை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    அதானி, அம்பானி போன்ற பெருநிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. 
    Next Story
    ×