search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் - மம்தா பானர்ஜி உறுதி

    மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்கமாட்டோம் என முதல்- மந்திரி மம்தா பானர்ஜி உறுதிபட தெரிவித்தார்.
    கொல்கத்தா:

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) போன்றவற்றுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு உள்ளது. இது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கொரோனா பரவலால் அவை ஓய்ந்திருந்தன.

    தற்போது கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அடுத்த மாதம் (ஜனவரி) அமல்படுத்தப்படும் என மேற்கு வங்காள பா.ஜனதா பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா சமீபத்தில் கூறியிருந்தார். இது மீண்டும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    என்.ஆர்.சி., என்.பி.ஆர். தொடர்பாக மத்திய அரசுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தை ஒட்டியுள்ள வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக கூறுகிறேன், நீங்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். அதை யாரும் மாற்ற முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றை மேற்கு வங்காளத்தில் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

    இவை அனைத்தும் மக்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றுவதற்காக பா.ஜனதா நடத்தி வரும் சூழ்ச்சி ஆகும். வெளிமாநிலத்தவர்கள் மூலம் வீடு வீடாக சென்று பா.ஜனதா கட்சி பிரிவினை பிரசாரங்களை மேற்கொள்கிறது. தனது பிரித்தாளும் அரசியல் மூலம் ‘மதுவா’ குடும்பத்தை பிரித்துள்ளது.

    பிரித்தாளும் அரசியல் மூலம் நாட்டை பா.ஜனதா அழித்துவிட்டது. ஆனால் மேற்கு வங்காளத்தை குஜராத்தாக மாற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். நான், தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்துவிட்டு ஓடிவிடும் பா.ஜனதாவை போன்றவள் அல்ல.

    விவசாயிகள் நலனுக்கு எதிராக பிரதமர் மோடி 3 சட்டங்களை கொண்டு வந்து, விவசாயிகளின் விளைபொருட்களை கார்பரேட்டுகள் எடுத்துச்செல்ல அனுமதித்து உள்ளார். உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகளை அத்தியாவசிய பொருட் கள் பட்டியலில் இருந்து எடுத்து, அவற்றை பதுக்குவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகரித்து விட்டது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
    Next Story
    ×