search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    சித்தராமையா தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் காங். எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

    புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பெங்களூருவில் விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெங்களூரு :

    மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

    இதில் விளைபொருட்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஆதரவு விலை நடைமுறைக்கு உத்தரவாதம் வழங்கப்படவில்லை. இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதையடுத்து 8-ந் தேதி (அதாவது நேற்று) வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாய சங்கங்கள் பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இதற்கு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிலவற்றை தவிர, காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கின. முழு அடைப்புக்கு ஆதரவாக கர்நாடகத்தில் உள்ள விவசாய சங்கங்கள், மாநிலத்தில் முழு அடைப்பு நடத்துவதாக அறிவித்தன. இதனால் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்தன.

    கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் பெங்களூரு டவுன் ஹால் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் அங்கிருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலமாக வந்தனர். இந்த போராட்டத்தில் கோடிஹள்ளி சந்திரசேகர் பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. மத்திய அரசு பிடிவாத போக்குடன் செயல்படுவது சரியல்ல. அந்த சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும். போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது. இந்த சட்டங்களை வாபஸ் பெறும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம். மத்திய அரசின் மிரட்டல் போக்கை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்.

    இவ்வாறு கோடிஹள்ளி சந்திரசேகர் கூறினார்.

    விவசாயிகள் போராட்டதிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது. இதையொட்டி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் தர்ணா போராட்டதில் ஈடுபட்டனர்.

    ஜனதா தளம்(எஸ்) கட்சியும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. (விரிவான செய்தி 3-ம் பக்கம்)

    பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் கர்நாடக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் குருபூர் சாந்தக்குமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் நடுரோட்டில் தட்டில் உணவு பரிமாறி சாப்பிட்டபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அதே போல் அனந்தராவ் சர்க்கிளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அங்கும், மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

    விவசாயிகள் போராட்டம் காரணமாக டவுன் ஹால் ரோடு, சேஷாத்திரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கெம்பேகவுடா ரோட்டில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரோட்டை பயன்படுத்தும் வாகனங்கள், நிருபதுங்கா ரோட்டில் திருப்பி விடப்பட்டன. ஒருவழிப்பாதையான நிருபதுங்கா ரோடு, நேற்று ஒருநாள் மட்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

    பெங்களூரு யஷ்வந்தபுராவில் உள்ள அரசு வேளாண்மை சந்தைக்கு விளைபொருட்கள் வரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாவட்ட மற்றும் தாலுகா தலைநகரங்களிலும் விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். பெங்களூருவில் அரசு பஸ்கள், ஆட்டோ, வாடகை கார்கள் எப்போதும் போல் இயங்கியது. கடைகள், பெரிய வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், சிட்டி மார்க்கெட் உள்பட காய்கறி சந்தைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன. மெட்ரோ ரெயில்கள் இயக்கத்தில் எந்த சிக்கலும் இருக்கவில்லை. வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர். வாட்டாள் நாகராஜ் மாட்டு வண்டியில் வந்து தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு எதிராக வெளிப்படுத்தினார்.

    கர்நாடகத்தில் பெங்களூரு மட்டுமின்றி தாவணகெரே, உப்பள்ளி-தார்வார், மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, பல்லாரி, பெலகாவி, உடுப்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தாவணகெரேயில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொப்பலில் விவசாயிகள் ரோட்டிலேயே டயரை போட்டு எரித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். சித்ரதுர்காவில் விவசாயிகள் தங்களின் கைகளில் கயிறுகளை கட்டியபடி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். மொத்தத்தில் முழு அடைப்புக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்ற போதிலும், விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக இருந்தது.
    Next Story
    ×