search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி பெற இலவச செயலி

    நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான இலவச செயலியை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.
    புதுடெல்லி:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

    அமெரிக்காவின் பைசர், இந்தியாவின் பாரத் பயோடெக், சீரம் இந்தியா ஆகிய மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிக்கு  மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சில வாரங்களில் இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடங்கும். 

    இந்நிலையில், தடுப்பூசி திட்டம் எவ்வாறு நடத்தப்படும் என்ற விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

    தடுப்பூசி திட்டத்தைக் கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது:

    தடுப்பூசி தேவைப்படும் ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி கிடைக்கும். கோ-வின் செயலி தடுப்பூசி அளிப்பவர்கள், பெறுவர்கள் போன்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    முதல் கட்டமாக அனைத்து சுகாதார நிபுணர்கள், இரண்டாம் கட்டத்தில் துப்புரவு, போலீஸ் போன்ற முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்கும். மூன்றாம் கட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடைய நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடையவர்கள் கோ-வின் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களின் தகவல்கள் உறுதி செய்யப்படும். தடுப்பூசி போட்ட பிறகு குறுந்தகவல் அனுப்பப்படும். க்யூ ஆர் சான்றிதழும் உருவாக்கப்படும்.

    எத்தனை தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டன, எத்தனை பேர் கலந்து கொண்டனர், எத்தனை பேர் வெளியேறி விட்டார்கள் போன்ற அறிக்கைகளும் செயலியில் உருவாக்கப்படும்.

    தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன கிடங்குகளின் வெப்பநிலையையும் நிகழ்நேரத்தில் செயலி அனுப்பும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×