search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ தலைவர் சிவன்
    X
    இஸ்ரோ தலைவர் சிவன்

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம்: இஸ்ரோ தலைவர் சிவன்

    கொரோனா தொற்று நோய் காரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளி திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2022-ம் ஆண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. இதற்காக இந்திய விமானப்படையில் பணியாற்றும் 3 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ரஷியாவில் விண்வெளி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த திட்ட அமலாக்கம் ஒரு ஆண்டுக்கு தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்துகிறது. இதை வருகிற 2022-ம் ஆண்டு அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்பு இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஜூலை ஆகிய மாதங்களில் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்துவதில் காலதாமதம் ஆகும்.

    இதை அடுத்த ஆண்டு செயல்படுத்துவோம் அல்லது அதற்கு அடுத்த ஆண்டு இந்த பணிகள் நடைபெறும். அதனால் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த ஒரு ஆண்டு தள்ளிப்போகலாம். சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லேண்டர், ரோவரை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்த சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்த நாங்கள் இன்னும் தேதியை முடிவு செய்யவில்லை. வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ரயான் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் எந்த மாதிரியான ஆய்வு கருவிகளை அனுப்புவது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு சிவன் கூறினார்.

    இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:-

    ககன்யான் திட்டத்திற்கு முன்பாக ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான எந்திர பிரிவின் ஒரு பாகமாக இருக்கும் 3.2 மீட்டர் அகலம், 8.5 மீட்டர் நீளத்தில் வட்ட வடிவத்தை எல் அன்ட் டி நிறுவனம் தயாரித்து இஸ்ரோவுக்கு வழங்கியுள்ளது. அது 5.5 கிலோ டன் (ஒரு டன் என்பது 1,000 கிலோ) எடை கொண்டது. ஆளில்லா விண்கல திட்டத்திற்கு இது முதல் படி ஆகும்.

    வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டத்தில் 20 வகையான விண்வெளி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வு பணி 4 ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும். ரஷியா, பிரான்சு, சுவீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இணைந்து திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சுக்ரயான் திட்டத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த கால அட்டவணைப்படி இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா? என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அந்த அட்டவணை மாறினால், அடுத்து 2024 அல்லது 2026-ம் ஆண்டுக்கு செல்லும். ஏனென்றால் அந்த வெள்ளி கிரகம், 19 மாதங்களுக்கு ஒரு முறை தான் பூமிக்கு அருகில் வரும். இந்த திட்டத்திற்கு இந்திய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஆய்வு கருவிகளை உள்ளடக்கிய திட்டங்களை நாங்கள் பெற்றுள்ளோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
    Next Story
    ×