search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    அதானி, அம்பானி சார்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

    அதானி, அம்பானி சார்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

    ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ம் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி வருகிறது.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

    அமைதியான நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்  காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்   அவசர சேவைகள் எதுவும் பாதிக்கப்படாது என விவசாய அமைப்புகள் கூறி உள்ளன. இதற்கு பல்வேறு மாநில அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அதானி, அம்பானி சார்பு சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு தமது முழு ஆதரவு உண்டு என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் அதானி, அம்பானி சார்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அதற்கு குறைவான எந்தவொரு விஷயத்தையும் ஏற்க முடியாது. நாட்டுக்கே படியளக்கும் விவசாயிகளுக்கு கொடுமைகளையும் அநீதியையும் இழைப்பதை அனுமதிக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×