search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய குழு தலைவர்
    X
    விவசாய குழு தலைவர்

    5-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி: போராட்டத்தை தொடரும் விவசாயிகள்

    மத்திய அரசு மற்றும் விவசாய குழுக்கள் இடையே நடைபெற்ற 5-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 10-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

    டெல்லி எல்லையில் திரண்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

    தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் திரண்ட வண்ணம் உள்ளனர். இதற்கிடையில், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்து தோல்வியடைந்தன.

    இந்நிலையில், மத்திய அரசு மற்றும் விவசாய குழு தலைவர்களுக்கு இடையே 5-ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாய குழு தலைவர்களுடன்  மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை மந்திரி பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பும்
    தங்கள் நிலைபாட்டை தெரிவித்தன.

    மத்திய அரசு தரப்பில் வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை முழுவதும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் நிலையாக இருந்தனர். 

    இதனால், இரு தரப்புக்கும் இடையே எந்த வித முடிவுகளும் எடுக்கப்படாமல் 5-ம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

    இதையடுத்து, 6-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 9-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது. 

    இதற்கிடையில், விவசாய குழுக்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் வரும் 8-ம் தேதி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×