search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சித்திரவதைகளை தடுக்கும்வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

    இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்திரவதை தொடர்பான வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எப். நரிமன் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.

    இந்த வழக்கில் நீதிபதி நரிமன் தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் விவகாரத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமராக்களை பொருத்த தேவையான போதுமான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும்.

    போலீஸ் நிலையங்களின் நுழைவாயிலிலும், லாக்-அப்களிலும், தாழ்வாரங்கள், முகப்புக்கூடம், வரவேற்பு பகுதி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறைகளிலும், லாக்-அப்புக்கு வெளியேயும், போலீஸ் நிலையத்தின் வெளிப்புறத்திலும் கேமராக்கள் பொருத்த வேண்டும். அந்த கேமராக்கள் நைட் விஷன் திறனுடன் இருக்க வேண்டும். கேமரா பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்கவேண்டும்.

    போலீஸ் நிலையங்களில் கைதிகள் தாக்கப்படுவது, சித்திரவதை, மரணம் போன்ற புகார்கள் தெரிவிக்கும்பட்சத்தில், மாநில மனித உரிமை ஆணையமும், கோர்ட்டுகளும் கேமரா பதிவுகளை கேட்டுப்பெற வேண்டும்.

    சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத் துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    மேற்கண்ட உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல்செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.
    Next Story
    ×